பாடல் எண் : 1
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
பொழிப்புரை :
இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.
குறிப்புரை :
இப்பதிகம் முழுவதுமே பெருமான் விரும்பியிருக்குமிடம் நள்ளாறு என்கின்றது. ஆர்த்த - நிறைந்த. அம்மையின் திருநாமம் போகமார்த்த பூண்முலையாள் என்பது. தன்னோடும் என்றது அம்மையைத் தன்னின் வேறாக இடப்பாகத்துக்கு எழுந்தருளச் செய்த நிலையைக் குறித்தது. பொன் அகலம் பாகம் ஆர்த்த என்பது தன்னோடு ஒரு திருமேனியில் இருக்கும் நிலையைக் குறித்தது. அகலம்-மார்பு. ஆகம்-மார்பு./n குருவருள் : அனல் வாதத்தின்போது ஞானசம்பந்தர் தாம் அருளிய பாடல் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்த்தபோது இப்போகமார்த்த பூண்முலையாள் என்னும் பதிகம் கிடைத்தது. திருமுறையில் கயிறு சார்த்திப் பார்க்கும் மரபை ஞானசம்பந்தரே தொடங்கி வைத்துள்ளதை இதனால் அறியலாம். போகமார்த்த பூண்முலையாள் என்னும் இத்தொடரால் இன்பதுன்ப அநுபவங்களாகிய போகத்தைத் தன் மார்பகத்தே தேக்கி வைத்து உயிர்களாகிய தம்பிள்ளைகட்குப் பாலாக ஊட்டுகிறாள் அம்மை என்ற குறிப்பும் கிடைக்கிறது. உலகில் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தே திருவருளால் சுரக்கின்ற தாய்ப்பாலைத் தங்கள் குழந்தைகட்குக் கரவாது கொடுத்து வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. தாய்ப்பாலே குழந்தைகட்குச் சிறந்த உணவு. நோய்த்தடுப்பு மருந்து. தாய்க்கும் சேய்க்கும் நலம் பயப்பது என்பது உணர்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
பொழிப்புரை :
அம்மை பாகத்தே உள்ள இடச்செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப் புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.
குறிப்புரை :
தோடுடைய காது - அம்மையின் காது. பீடு -பெருமை. ஏடு உடைய மேலுலகு - ஒன்றின்மேல் ஒன்றாக எடுத்தலையுடைய மேலுலகங்கள். இவ்விரண்டடிகளாலும் இறைவனுடைய தனியரசிற்கு உரிய நாட்டுப்பரப்பு சொல்லப்பட்டது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
பொழிப்புரை :
பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
குறிப்புரை :
ஆன் முறையால் - பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட, ஆற்ற ஆடி எனக் கூட்டுக. ஆற்ற - மிக. அணியிழை - உமாதேவியார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4
புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
பொழிப்புரை :
பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும்பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
குறிப்புரை :
புல்கவல்ல - தழுவவல்ல, மல்க - நிறைய. பல்க - இறுக. இது அடியார்களுக்குத் திருவடி நிழலைத் தருகின்றார் என்று பயன் கூறுகின்றது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பினில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
பொழிப்புரை :
ஆன்ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவியதலம் திருநள்ளாறு ஆகும்.
குறிப்புரை :
ஏறுதாங்கி - கொடியின்கண் இடபத்தைத் தாங்கி. ஊர்தி பேணி - இடபவாகனத்தின்மீது ஆரோகணித்து. ஏர் - அழகு. நிரைகொன்றை - ஒழுங்கான கொன்றை. நாறு - மணம்.
திருமந்திரம்
திருமந்திரம் தமிழ் ஆகம நூல். வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு நூல் என்றும் சைவர் கூறுவர்திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர். இதில் 232 அதிகாரங்கள் உள்ளன. இப்பொழுது இதில் 3100 செய்யுட்கள் உள்ளன. ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்என்பதனால் இதற்கு உரியவை 3000 செய்யுட்களே என்று அறியலாம். எஞ்சியவை பிற்சேர்க்கையாம்.
ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருமந்திர மாலை. தமிழ் மூவாயிரம் என்றும் இதனைக் கூறுவர். தமிழில் தோன்றிய ஒன்பது ஆகமங்களே ஒன்பது தந்திரங்களாக இயற்றப்பட்டன என்பது அறிஞர் கருத்து. இதற்கு வடமொழியில் மூலநூல் இல்லையென்பர். முழுத்தமிழில் பாடினார் திருமூலர் என்ற நம்பியாண்டார் நம்பியின் வாக்கினை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.
5.1.1 திருமூலநாயனார்
 
சைவ சமய அடியாருள் காலத்தால் முந்தியவர்கள் திருமூல நாயனாரும், காரைக்கால் அம்மையாரும் ஆவர்.
திருமூலர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர். சுந்தர மூர்த்தி நாயனார், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்என்று தம் பேரன்பு தோன்றக் கூறினார். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள், தம்திருத்தொண்டர் திருவந்தாதியில்,

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பை புக்கு
முடி மன்னு கூனல் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படியே
பரவி விட்டு என் உச்சி
அடிமன்ன வைத்த பிரான் மூலன்
ஆகின்ற அங்கணனே                   (36)
என்று பாடினார். மூலன் என்பவர், சாத்தனூரைச் சேர்ந்தவனும், ஆக்களை மேய்ப்பவனும் ஆன இடையன் ஒருவன் இறந்தபோது, அவன் உடம்பில் தன் உயிரைச் செலுத்தியவர். அவர் வேதத்தில் சொன்னவாறே சிவபெருமான் பெருமையினை முழுத்தமிழில் பாடினார் என்பது இச்செய்யுளால் அறியப்படும் செய்திச் சுருக்கமாகும்.
கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான தெய்வச் சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றை விரிவாகப் பாடுகின்றார். அவர் கூறும் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:-
திருமூலர் திருக்கயிலையில் வாழ்ந்த சிவயோகியார். அவர் தமிழகத்தில் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய மாமுனிவரைக் காண விரும்பினார். பல தலங்களை வணங்கினார். அவர் காவிரிக்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஆவடுதுறையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கி, சில நாள் அங்கே தங்கியிருந்தார். அவ்விடம் விட்டு நீங்கும்பொழுது, காட்டில் பசுக்களின் கதறலைக் கேட்டார். அவற்றை மேய்த்த இடையன் இறந்தமையே ஆக்களின் துயருக்குக் காரணம் என உணர்ந்தார். தம் ஆற்றலால் தம் உயிரை ஆயனின் உடம்பில் புகச் செய்தார். ஆக்களை உரியவரிடம் சேர்த்தார். ஆயன் மனைவி, இவரைத் தன் கணவன் என்று கருதி நெருங்கியபொழுது, ‘எனக்கு உன்னோடு உறவு இல்லைஎன்று கூறி, சாத்தனூரின் பொதுவிடத்தில் சிவயோகத்தில் அமர்ந்தார்.
பின்னர்த் தம் உடம்பைத் தேடிச் சென்றார். இறைவன் அதனை வேண்டும் என்றே மறைத்தருளினார். பின்னர் அவர் ஆவடுதுறைக்குச் சென்றார். திருக்கோயிலுக்கு மேற்கில் இருந்த அரசமரத்தடியில் அமர்ந்தார். மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார். ஆண்டுக்கு ஒரு செய்யுளாக 3000 செய்யுட்களை இயற்றினார். அங்ஙனம் இயற்றப்பட்டதே திருமந்திரம் என்னும் ஆகம நூல் என்பார் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்.
·காலம்
 
சுந்தரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர். அவர் திருமூலருக்கு வணக்கம் சொல்வதனால் திருமூலர் காலத்தால் முந்தியவர். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடல்களில் திருமூலரின் செல்வாக்குக் காணப்படுவதால், அவர்களின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் திருமூலர் என்று தெரிகிறது. தில்லைத் திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்திற்குக் கி.பி. 500இல் ஆண்ட பல்லவ அரசன் சிம்மவர்மன் பொன் வேய்ந்தான்.
அதன்பின் அது பொன்னம்பலம் ஆயிற்று. திருமூலர் இப்பெயரைக் கையாள்கின்றார். எனவே, திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்பர் அறிஞர்.
5.1.2 திருமந்திரத்தின் பாடுபொருள்
 
சைவ சமயத்தின் தத்துவத்தைச் சைவசித்தாந்தம் என்பர். பதி, பசு, பாசம் என்ற மூன்றும் இச்சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகள். (பதி - இறைவன்பசு - உயிர்கள்பாசம் - ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்). திருமந்திர நூலின் பெரும் பகுதி சைவ சமயத் தத்துவங்களை விளக்குவது. அத்துடன், எல்லாருக்கும் பொதுவான அறக் கருத்துகளும் இதில் உள்ளன. அன்புடைமை, அருள் உடைமை, நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலானவை இவற்றுள் சிலவாகும்.
இந்நூலின் முதல் நான்கு தந்திரங்கள் சிவஞானத்தைப் பெற விரும்புவோர் அதற்குத் தம்மைத் தகுதியாளராக்கிக் கொள்ளுதற்கு உரிய வழிகளை விளக்குகின்றன.
ஐந்தாவது தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விவரிக்கின்றது. ஆறு முதல் ஒன்பது இறுதியான தந்திரங்கள் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கனவாக உள்ள நல்ல பயன்கள் பற்றி உணர்த்துகின்றன.
ஆசனம், பிராணாயாமம், தியானம், சமாதி முதலியன பற்றியும், எண்பெரும் சித்திகள் பற்றியும், உடம்பைப் பேணிக் காக்கும் வழி பற்றியும் இந்நூல் விளக்கியுள்ளது.
சைவ சமயத்தின் நான்கு பிரிவுகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகள், அந்த நெறிகளில் நிற்பார் அடையும் நான்கு நிலைகள் ஆகியன ஐந்தாவது தந்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன.
இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, பாசத்தின் பண்பு, குருவின் இன்றியமையாமை, நல்வினை தீவினைகள், இவற்றின் நீக்கம், ஞானம் கைவரப்பெற்ற சிவயோகிகளின் பெருமையும், தன்மைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.திருமந்திரம் கூறும் தத்துவங்களில் சிலவற்றை இங்கே பார்த்தோம்.
5.1.3 திருமந்திரச் சிந்தனைகள்
 
திருமந்திரம் உலகுக்கு வழங்கும் உயர்ந்த கருத்துகள் மிகப் பல. சான்றுக்குச் சில மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
·  அன்பும் சிவமும் ஒன்றே
 
அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவில்லாதவர் என்று அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மையென்றும், இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் என்றும் கூறுகின்றார் திருமூலர்.
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் 
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் 
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

·இருகோயில்கள்
 
உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.
தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
(பகவன் = கடவுள்)
·  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்
 
சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் திருமூலர்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
உடம்பு என்பது இழிவானதன்று. அது இறைவனுக்கு உரிய திருக்கோயில் என்பார் அவர்.
·  ஆசை அறுமின்
 
ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்பர். ஆசை அற்றால் அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும். எஞ்சி நிற்பது பேரானந்தமே.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

·  ஒன்றே குலம் ஒருவனே கடவுள்
 
தமிழர் என்றும் எண்ணிப் பெருமைப்படத்தக்க பொதுமைத் தத்துவத்தை வழங்கியவர் திருமூலர். சாதி, மதம், நாடு, மொழி என்று பல தடைச் சுவர்களால் சிதறிக்கிடக்கும் மனித குலத்தை நோக்கி,
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை
என முழங்கினார்.
என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம்என்று குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்    (85)

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்    (250)

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்  (1823)


உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. 
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. 
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே .சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர்பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.
அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.
அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.
சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.


மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே!
கோவிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே!
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடல் ஆகுமே!
பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்?
ஆதி பூசை கொண்டதோ? அநாதி பூசை கொண்டதோ?
ஏது பூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெறுக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்திங்கு உண்மை கூற வல்லீரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடந்து கூடலாகுமே!
 (திருப்பாவை)
1.
மார்கழித் திங்கள்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

2.
வையத்து வாழ்வீர்காள்!
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

3.
ஓங்கி உலகளந்த 
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

4.
ஆழிமழைக் கண்ணா
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

5.
மாயனை 
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

 திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்குஅருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப்போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

நூலாசிரியர்
குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராகவிளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்குஅருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கியசுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல்அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

கதை அமைப்பு
குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறதுமூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக்காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லிஇறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியேவருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும்சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ளசெய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம்நிறைவேறும் என்று குறி சொல்லி பரிசு பெறுகிறாள் குறத்தி சிங்கி. அவள் கணவன் சிங்கன் அவளைக் காணத்தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடிஇன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.


நூலின் சிறப்புகள்
குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும், இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில்நடிக்கப்பட்டு வருவதும், இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீதுதலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ்,
 யமகஅந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருந்தாலும் இன்றுபலரும் விரும்பிப்
 படிப்பது   அவருடைய குறவஞ்சி ஒன்றே. குற்றாலக்குறவஞ்சியானது இறைவன்மீது பாடப் பெற்றதால் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை)நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது. சான்றாகவசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தாரி பந்து பயின்றனளே

என்ற பாடலைக் கூறலாம். இதைப்போல் சந்தநயம் கொண்ட இன்னும் பலபாடல்கள் இந்நூலாசிரியரால்இயற்றப்பட்டுள்ளன.
குற்றாலக் குறவஞ்சியில் தமிழகத்தின் காட்டு விலங்குகளைப் பற்றியும் செடியினங்களைப் பற்றியும் மிகப்பலகுறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே;

(1) ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடுதழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும்தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள், வனவேடர்கள் தம் கண்களால்ஏறெடுத்துப்)பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச்செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளைவளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும்வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும்தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்றசடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்றதிருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள்வாழ்கின்ற மலையாகும்; (இன்னுங் கேள்)

(2)     
முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
   முற்றம்எங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
   கிம்புரியின் கொம்பொடித்து வேம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
   தேன்அலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவின் ஈசர்
   வளம்பெருகும் திரிகூட மலைஎங்கள் மலையே;
(2) ஒலிக்கின்ற அலைகளையுடைய நீர் வீழ்ச்சி, செல்லும் வேகத்தில் கழங்காடுகின்றதென்னும்படி முத்துக்களை ஒதுக்கிச் செல்லும்; அவ்வருவி, மக்கள் வாழ்கின்ற வீட்டின்முற்றங்களிலெல்லாம் பரவிச் சென்று சிறுமிகளின் மணல்வீடுகளை அழித்துக் கொண்டுஓட்டம் பிடிக்கும்; நாங்கள் மலைக்கிழங்குகளைத் தோண்டியும், தேன் இறால்களைப் பிய்த்துஎடுத்தும், மலையின் செழிப்பைப் பாடிக்கொண்டே கூத்தாடுவோம்; பூண்கட்டியயானைக்கொம்புகளை ஒடித்து உலக்கையாகக் கொண்டு வறுத்த தினைத் தானியத்தைஇடிப்போம். இளமை பொருந்திய குரங்குகள் இனிமையுள்ள மாம் பழங்களையே பந்தாகக்கொண்டு அடித்து விளையாடும்; தேன் பெருகி ஓடுகின்ற செண்பகப் பூவின் மணம்,தேவருலகினிடத்தே போய்ப் பரவும்; அருட்கொடை வழங்குகின்ற தேவாதி தேவராகியகுறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரியதான எல்லாவளப்பமும் பெருகியிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள்வாழுகின்ற மலையாகும்; (இன்னுங் கேள்)

(3)     
ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும்
   அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
வேடுவர்கள் தினைவிரைக்கச் சாடுபுனந் தோறும்
   விந்தைஅகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும்
காடுதொறும் ஓடிவரை ஆடுகுதி பாயும்
   காகமணு காமலையில் மேகநிரை சாயும்
நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
   நிலைதங்கும் திரிகூடமலை எங்கள் மலையே;

(3) ஆடுகின்ற நாகப் பாம்புகள் கக்கிய எண்ணிறந்த மணிகள் எங்கும் ஒளிகொடுக்கும்;யானைகளானவை திங்களைத் தாம் உண்ணும் கவள உருண்டையென எண்ணி அதுசெல்கின்ற வான்வழியில் போகவொட்டாமல் தடைசெய்யும், மலைக் குறவர்கள்தினைப்பயிரை விதைப்பதற்காக அழிக்கப் படுகின்ற காடுகளிலெல்லாம் உள்ள பலவகைமரங்களும் அகில் குங்குமம் சந்தனமரங்களும் கண்டோர் வியக்கும்படி தம் மணங்களைப்பரப்பும்; காடுகளில் எங்கும் ஓடிச்சென்று வரையாடுகள் துள்ளிக் கீழே பாயும்; காகமும் பறவாதஉயர்ந்த மலையில் மேகக் கூட்டங்கள் உச்சியில் சாய்ந்தோடும்; நீண்ட குறும்பலாவடியில்எழுந்தருளியிருக்கின்றவரும் கைலை மலையில் வாழ்பவருமாகிய திருக்குற்றாலநாதரின்நிலைபெற்றிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்றமலையாகும்; (இன்னுங் கேள்)

(4)     
கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே
   கனகமகா மேருஎன நிற்குமலை அம்மே
சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே
   சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே
வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே
   வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே
துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும்
   துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே;
(4) திருக்கைலைமலை யென்று கூறப்படுகின்ற வடக்குப் பக்க மலைக்குத் தென்பக்கத்தில்இருக்கின்ற மலையாகும்; இது பெரிய பொன்மலை என்னும் மேருமலை போன்றதென்னும்படி உயர்ந்த மலை அம்மே! சிவசைலம் என்னும் தெற்கு பக்கமுள்ள மலைக்குவடக்குப் பக்கமாக இருக்கின்ற மலை இஃது அம்மே! இம்மலை மற்ற எல்லா மலைகளின்சிறப்பெல்லாம் தனக்குள் நிறையக்கொண்டிருக்கும் வளமுடையது அம்மே! அதுவைரமணியுடன் பலவகை மணிகளையும் விளைத்துத் தருவது அம்மே! வான்வழியாகச்செல்லும் ஞாயிறு குகைகளையே வழியாகக்கொண்டு நுழைந்து செல்வதற்குஇடனாகஇருப்பதும் அந்த மலைதான் அம்மே! அறிதுயில் புரிகின்ற திருமாலான வருங்கூடத்துயில் விட்டெழுந்து எல்லா உலகங்களிலும் போய்த் தேடுகின்ற மேன்மையாளராகியதிரிகூடநாதப் பெருமானுக்குரிய திரிகூட மலைதான் எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்றமலையாகும் அம்மே! (இன்னுங் கேள்)

(5)     
கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே
   கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
   இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
   தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
   திரிகூடமலை யெங்கள் செல்வமலை அம்மே;

(5) கொல்லி மலையானது எனக்குப் பின் பிறந்த செல்லி என்னும் பெயருடையாளுக்குரியமலையாகும்; அவளின் கணவனுக்குக் குடிக்காணியாட்சியாக இருப்பது பழனிமலை ஆகும்அம்மே! ஞாயிறு மேலே செல்கின்ற விந்தை என்னும் மலையே என் தந்தைக்குரியமலையாகும் அம்மே! இமயமலை என்னுடைய தமையனுக்குரிய மலையாகும் அம்மே!சொல்லுதற்கரிய சுவாமி மலை என்னும் மலையே என் மாமியாளுக்குரிய மலையாகும்அம்மே! என் தோழிக்குரிய மலையோ நாஞ்சில் நாட்டிலுள்ள வேள்வி யென்னும் மலையாகும்அம்மே! மேகங்கள் குமுறலாகிய பறையை முழக்க, அதற்கேற்ப மயிலினங்கள்நடனஞ்செய்கின்ற திரிகூட மென்னும் திருக்குற்றாலமலையே எங்களுக்குச்செல்வப்பொருளாக இருக்கின்ற நாங்கள் வாழும் மலையம்மே! (இன்னுங் கேள்)

(6)     
ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்வோம்
   உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள்
வெருவிவருந் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி
   வேங்கையாய் வெயில்மறைந்த பாங்குதனைக்குறித்தே
அருள்இலஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம்
   ஆதினந்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்
பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
   பரமர்திரி கூடமலை பழையமலை அம்மே.
  (6) எங்கள் குலந்தவிர வேறொரு சாதியில் நாங்கள் பெண்கள் கொடுக்கமாட்டோம்; வேறொருகுலத்தில் பெண்களை மணஞ்செய்யவும் மாட்டோம்; குறவர் சாதியினராகிய நாங்கள்ஒருவரை நட்புக் கொண்டால் இடையில் அந்நட்பை விட்டுவிடமாட்டோம்; நாங்கள்அச்சங்கொள்ளும்படி தினைப் புனத்தினிடத்தே வருகின்ற யானை முதலிய விலங்குகளைத்துரத்தி வேங்கை மரமாக நின்று எங்களுக்கு நிழல் தந்த நன்மைக்காக எண்ணிப் பார்த்துஅருளாளராகிய இலஞ்சியில் எழுந்தருளியிருக்கின்ற வேலினை யுடைய முருகப்பெருமானுக்கு வள்ளி யென்னும் ஒரு பெண்ணை முன்பு கொடுக்கலானோம்; அதற்காகஎங்களுக்குரிமையான வேறு மலைகள் எல்லாவற்றையும் மகட்கொடைப்பொருளாகவழங்கலானோம்; ஞாயிறு திங்கள் சுற்றிவருகின்ற மேருமலையைத் துருவன் என்பவனுக்குக்கொடுத்துதவினோம்; சிறந்தவராகிய திருக்குற்றால நாதருக்குரிய இத்தகைய திரிகூடமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும் அம்மே! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்