முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆழ்வார் பாடல்களில் பெண் இருப்பு
            இந்திய  மரபில் பெண்ணுக்கான இருப்பின் விதியை, பல நிலைகளில் உருவாக்கி / வகுத்தும்,  செயல்படுத்தியும் வந்திருப்பதை, தொல்சீர் இலக்கண, இலக்கியங்கின் ஊடாக பயணிக்கும் போது அறியமுடியும்., சங்க கால, வேத கால பெண்கள் பெருமையோடும் சிறப்போடும் வாழ்ந்தார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கவும் முற்பட்டிருக்கின்றனர்.  ஆனால் சமூத்தின் பொதுபுத்தியில் பெண் ஆணைவிடக்  கீழானவள்; மாறுபட்டவள் இயற்கையிலேயே இவ்விதம் உருவாக்கப்பட்டவள் என்ற கருத்துரு படிந்து கிடக்கிறது. அதனால் தான் சமூகத்தின் அடிமைகள், சேவகர்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் பெண்ணையும் சேர்த்தே பேசியிருக்கின்றனர். ஆட்சி, அதிகாரம், தனிவாழ்வு, பண்பாட்டு கூறுகள் அனைத்திலும் இக் கருத்து ஊடுருவி இருந்தன. சமண , பௌத்தங்கள் மாற்றுச் சிந்தனை உருவாக்கினாலும், பெண் குறித்தான கருத்தில் ஒத்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளன. வைதீகச் சமயங்களில் பெண்கள் அறியப்பட்டாலும், ‘தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங்காலைக் கிழத்திக் கில்லை ( தொல்காப்பியம், பொருள்.அகம்.116) என்னும் தொல்காப்பிய விதியை மீறி ஆண்டாள் செயல்பட்டிருந்தாலும், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லையுள் நிற்பதை அறியலாம். பொதுவாக வைதீக இலக்கியங்கள், பெண்ணை இறைவன் திருவருளை அடைவதற்குத் தடையானவர்களாகவே, கட்டமைக்கின்றன. இதனை அன்றைய சூழலில் நிலவிய  அரசியல், சமூக நிலை என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்நிலையில் ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை  பாடப்பட்டுத் தொகுக்கப்பட்ட வைணவ பத்தி இலக்கியமான நாலயிரத் திவ்யப்பிரபந்தத்தில், ஆண்டாள் பாடலைத் தவிர்த்து, மற்ற ஆழ்வார்களின் பாடல்களில், பெண் குறித்து, அவர்களின் மனவெளியில் படிந்துகிடந்த, கருத்துப் பதிவுகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
 ஆழ்வார்கள் இறையுணர்வை வெளிப்படுத்துவதில்
·         தன் மனவுணர்வுகளை வெளிப்படுத்துதல்
·         இறைவனை காணும் முறை
·         குடும்பத்துடன் தனக்கு இருக்கும் உறவுகளையெல்லாம் நீக்கச் சொல்லி இறைவனை வேண்டுதல்,
·         இறைவனையே அனைத்துமாக காணுதல்.
என்னும் நிலையில் செயல்பட்டிருக்கின்றனர்.

 ஆழ்வார்கள் தங்களது பாடல்களில் கண்ணனைப் பல பெண்களுடன் இணைத்து இன்புற்றுப் பாடும் அதே நேரத்தில், ஆண்களுக்குப் பெண்களிடம் மோகம் கூடாது என வலியுறுத்தியும், பெண் உறவு இறையருளை அடையத் தடையாக இருக்கும், துன்பமே தரும் என்று பாடுவதும், அவர்களே அகத்துறை பாடல்களில் பெண்ணுணர்வு கொண்டு ஏங்கி தவித்து புலம்புவதும் முரணானது. அன்றைய காலச் சூழலிலிருந்தும், சமூகம் உருவாக்கியுள்ள பெண் குறித்தான தொன்மங்களில் இருந்து விடுபட முடியாமல் மீண்டும் புதுப்பித்துக்கொண்டும்பெண் குறித்தான புரிதலில்  மனசிக்கலிலும், இருப்பதை ஆழ்வார் பாடல்களில் காணமுடிகின்றது. தொண்டரடிப் பொடியாழ்வார்,

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
                                                        (திருமாலை -5)

 எனப் பெண்ணால் வரும் இன்பம், இறுதியில் துன்பத்தையே தரும் என்றும், அத்தகைய துன்பத்தை விளைவிக்கூடிய பெண்களின் மாயவலையிலிருந்து, இறைவன் தன்னை மீட்டெடுத்தாகப் பாடுகிறார்.

ஆதனாய் கள்வனாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்துவேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே (887, திருமாலை -16)

மதுரகவியாழ்வாரும் இறைவனை அடைவதற்கு முன் பெண்களை நம்பி தன்னுடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டதாகக் கூறுகிறார்,

நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்அடி யேன்சதிர்த் தேனின்று ( கண்ணி நுண்சிறுத்தாம்பு -5)

 பெண் இன்பத்தைப் பெரிதென நினைத்து, துய்த்து கிடந்து உழன்று, பல காலம் வீணாகக் கழித்து, இறையருளை உணராது பேதையாகி, பிறகு இறைஅருளின் சிறப்பை உணர்ந்து, இறைவன் திருவடி அடைந்தாகப் பல பாடல்களில் வருந்தி வருந்தி புலம்புகிறார் திருமங்கையாழ்வார்.

ஆவியே அமுதே என நினைந் துருகி
        அவரவர் பனைமுலை துணையா
பாவியே னுணராது எத்தனை பகலும்
 பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் (949 – பெரிய திருமொழி முதற்பத்து)

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
 தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
        ஒழிந்தன கழிந்தவந் நாள்கள்(950 – பெரிய திருமொழி முதற்பத்து)

வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
        வேற்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்(951–பெரிய திருமொழிமுதற்பத்து)

பெண்களின் மீதிருக்கும் மோகத்தை விட்டு, இறைவனின் அடியைச் சரணடைய வேண்டும் என்கிறார் பொய்கையாழ்வார்.

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர் தோள் பைவிட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதம்நாற்பால்
வேத்த்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்
பாதத்தான் பாதம் பணிந்து.(மூன்றாம் திருவந்தாதி.14)  

 சிற்றின்பமான பெண்ணின்பத்தை விட்டு பேரருளாகிய இறைவன் திருவடியை அடைந்தாக நம்மாழ்வார் புனைகிறார்.
கண்டுகேட் டுற்றுமோந்  துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே (3104, திருவாய்மொழி)            

·         தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது, பெண் பேரின்பமாகிய இறையருளைப் பெறுவதற்குத் தடையானவளாகவே சித்திரிக்கப்படுகிறாள்.

·         தன்னை பெண்ணாகப் பாவித்தும்  , இறைவனை நாயகனாக உருவகித்தும் பாடும் பாடல்களில் பெண்ணுணர்வு மிக்குப் பாடுவதும், இறைவனைப் பெண்கள் மனத்தைக்கவர்பவனாகவும், பலரை மணந்து கொண்டவனாகவும், பெண்களிடம் குறும்பு செய்பவனாகவும் பாடும் பொழுது கொண்டாட்ட மனநிலையுடன் பாடுவதும்,  அதேநேரத்தில் தாங்களுடைய நிலையில் பெண்ணை வெறுத்தொதுக்கி ஆழ்வார்கள் பாடுவதும் முரண்பாடனது.

·         பெண்ணின் மீது வரலாற்று நெடுகிலும் ஏற்பட்ட ஒடுக்குமுறையின், தொடரோட்டமாகவே ஆழ்வாருடைய சிலபாடல்கள்  வெளிப்படுகின்றன.

·         மொழி, எழுத்து, வழியாகவே பெண்ணுக்கான கருத்துரு உருவாக்கப்பட்டு, சமூகத்தின் பொது தளத்தில் உலவவிடப்படுகிற சூழலில் ஆழ்வார் பாடல்களும் பெண் குறித்த பிம்பத்தைச் சமூக , அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்டமைக்கின்றன.

·         ஆணாதிக்கச் சமூகத்தின் பெண் குறித்தான மோசமான நிலையையும், அவளுக்கான சமூக அங்கீகாரம் என்ன என்பதையும் இப்பாடல்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

·         அதோடு பத்திமை எழுச்சி காலத்தை, தமிழக நிலையிலிருந்து மட்டும் பார்க்காமல் பாரத கண்டம் முழுதும் பரவியிருந்த அரசியல், பண்பாடு, சமூக சூழல், அதன் விளைச்சலால் விளைந்த இலக்கியங்கள் என அனைத்தையும் இணைத்து ஒப்பு நோக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு ஒப்பு நோக்குழி, எந்த மரபினுடைய உள்வாங்களும் கூறுகளும் பத்தி இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன  என்பதை அறியமுடியும். அதனோடு  ஆழ்வார்களின் வாழ்க்கை பின்புலத்தோடு ஆராய்ந்தால் புதியவெளிச்சம் கிடைக்கும்.கருத்துகள்

Dr B Jambulingam இவ்வாறு கூறியுள்ளார்…
வித்தியாசமான கண்ணோட்டம். பகிர்வுக்கு நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…