முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு 

சரீரத்தால் அடிமைப்பட்டிருப்பதைப் பார்க்கிலும்
அறிவினால் அடிமைப்பட்டிருப்பது மிகவும் கொடுமையாகும்
                                                                                              பேராசிரியர் . வையாபுரிப்பிள்ளை
தமிழ்ப் பதிப்புச் சூழலில்,  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அறிமுகமாகிய அச்சு ஊடகத்தின் காரணமாக, சுவடி எழுத்துக்கள்  அச்சு எழுத்துக்களாகப் பதிப்பிக்கப்பட்டன. ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரன் பிள்ளை.வே. சாமிநாதையர் போன்றோர்  தமிழ் தொல்சீர் இலக்கண இலக்கியங்களைத் தேடித்தேடி கிடைத்தப் பிரதிகளை ஒப்பு நோக்கி மூலபாடம் இதுவெனத் தெளிந்தும், பாடவேறுபாடுகளைச் சுட்டியும், உரைகள் காணப்பாட்டால் உரைகளோடும் பதிப்பித்தனர். இப்பதிப்புகள் அக்கால பதிப்புமுறைகளை உள்வாங்கி செயல்பட்டிருந்தாலும் ,  

·         தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலையிலும்
·         தமிழியல் ஆய்வுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும்,

பதிப்பிக்கப்பட்டிருப்பதை உணரமுடியும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியங்கள் அச்சுப்பதிப்புகளாக முழுமையும் வெளிவந்துவிட்டன. அவை தனித்தனி நூல்களாகக் காணப்பட்டன. தமிழ்ப் புலமையாளர்கள் மத்தியில் இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உருப்பெற்றதன் விளைவாக, 1933 இல் சங்க இலக்கியநூற் புலவர் பெயரகராதி என்னும் நூல், எஸ். வையாபுரிபிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்படுகிறது. அதனடிப்படையில் தமிழார்வலர்களின் விருப்பத்திற்கேற்ப 1940 இல் சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என்னும் தலைப்பில் புவல்களின் பெயர், அவர்கள் பாடல்கள் இடம்பெற்ற  நூற்களின் அகர வரிசையில் பதிப்பிக்கப்படுகிறது.
பேராசியர் அடிப்படையில் மொழியியல், அகராதியியல், வரலாற்றியல், ஒப்பீட்டியல் என்னும் சம கால ஆய்வு முறைமைகளையும், புலமை மரபையும் உட்செறித்து காரண காரியத்துடன் ஆய்வினை அணுகும் போக்கினைக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய பதிப்பும் மற்ற பதிப்புகளில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. 1922-இல் மனோன்மணியம் பதிப்பைத் தொடங்கிய பேராசிரியர் 1956 வரை கிட்டத்தட்ட அறுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார். பேராசியர் . வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப் பணி என்னும் தலைப்பில் ஆய்வு செய்த பு. ஜார்ஜ் பலவகை நூல்களைப் பதிப்பித்துள்ள வையாபுரிப்பிள்ளையின் பதிப்பு அறிவியல் முறையிலானது என்றும், தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்தவை. ஆனால் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் உரிய மதிப்பீடு  செய்யப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். மேலும் தமிழ்ப் பதிப்பு வரலாறு சரியாக எழுதப்பட் வேண்டுமெனில், பதிப்பாசிரியர் என்ற நிலையில், வையாபுரி பிள்ளையை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகிறது (பு. ஜார்ஜ்: 2002) அந்த வகையில் வையாபுரிப்பிள்ளை தொகுத்து, பதிப்பித்த சங்க இலக்கிய பதிப்பினுள் செயல்பட்டுள்ள பதிப்பு முறைமைகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கீழைத்தேய மாநாட்டின் தலைமையுரையில்,
            தமிழ் முதலிய மொழிகளுக்குரிய தனித்த இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் பல மொழிகளுக்குரிய இலக்கியங்களைப் பற்றிய  ஒப்புநோக்கு ஆராய்ச்சியும் செய்தல் வேண்டும். ஒப்பு நோக்கு ஆராய்ச்சிக்கு உதராணங்களாகத் திராவிட இலக்கிய ஆராய்ச்சி, இந்திய இலக்கிய ஆராய்ச்சி என்பவற்றைக் கூறலாம். தனிமொழி இலக்கிய ஆராய்ச்சியில் முக்கியமாக நான்கு துறைகள் உள்ளன. அவையாவன: நூற்பதிப்புதுறை(Editing work), இலக்கிய மதிப்புத்துறை (Literary Criticism), இலக்கிய வரலாற்றுத்துறை(Literary History),  சரித்திரப் பொருள்களின் துறையாகும் (Treatment of historical and other materials). இந்நான்கு துறைகளின் அடிப்படையில் தமிழியல்  ஆய்வுகள் நிகழ்த்தப்படவேண்டும்  என்று கூறிஅவரே அவ்வாறு செயல்பட்டும் உள்ளார். அவற்றுள் நூற்பதிப்புகள் தொடர்பானவற்றைக் கீழ்கண்டவாறு பிரித்துக்கொள்ளலாம்.
·         ஆதார நூற்றொகுதிப் பதிப்புகள்
·         தொகைநூற்றொகுதிப் பதிப்புகள்
·         காப்பியப் பதிப்புகள்
·         இலக்கணப் பதிப்புகள்
·         சிற்றிலக்கியப் பதிப்புகள்
·         பிற பதிப்புகள்
தொகைநூற்றொகுதி பதிப்புகள் என்பவற்றுள் சங்க இலக்கியம் மற்றும் புறத்திரட்டு என்னும் இரண்டு நூல்களும் அமைகின்றன. இவற்றுள் சங்க இலக்கியப் பதிப்பு என்று எண்ணும் பொழுது 1933 இல் திருமுறுகாற்றுப்படை(புதியவுரை) பதிப்பித்துள்ளார். மேலும் 1943 இலும் திருமுறுகாற்றுப்படை(உரையாசிருயருரை) பதிப்பித்துள்ளார். 1940 இல் சங்க இலக்கியம்பாட்டும் தொகையும் என்னும் பதிப்பே இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டுகிறது.

சங்க இலக்கியப் பதிப்பு
சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என்னும்  முதற் பதிப்பு(1940) முன்னுரையில்   சைவ மகாசமாஜ காரியதரிசி .பாலசுப்பிரமணியம், சென்னைப் பல்கலைக்கழகத் தலைமையாசிரியரும், ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதிப்பதில் சிறந்த நிபுணரும், சங்க இலக்கியங்களை முப்பது வருஷ காலமாகப் பயிற்சியுடையவரும், சமாஜ வெளியீடுகள் பலவற்றிற்குப்  பல பிரதிகளைச் சேகரித்து ஒப்பு நோக்கிப் பல வழிகளிலும் துணை புரிந்தவரும், எனது நண்பருமாகிய சைவத்திருவாளர் ராவ்சாஹிப்எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் இவ்வெளியீட்டிற்காக இயற்றிய தொண்டு அளவிடற்பாலதன்று. இப்பதிப்புக்கு இவர்களே பதிப்பாசிரியர் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பேருதவி செய்துள்ளார்கள்(1967;முன்னுரை) என்று குறிப்பிடுகிறார். 1967 இல் பாரி நிலையம் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் தொகுப்பும் பதிப்பும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை என்று காணப்படுகிறது. வையாபுரியின் பதிப்பினைப் பற்றி ஆய்வு செய்த பு.ஜார்ஜ்  இப்பதிப்புக்காக வையாபுரிப்பிள்ளை பயன்படுத்திய குறிப்பு முதலானவை அவர்தம் மகளார் வை. சரோஜினியின் வீட்டில் நேரடிப்பார்வைக்குக் கிடைப்பதாலும் இப்பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை என்பது தெளிவாகிறது என்று குறிப்பு காணப்படுகிறது. இந்நூல் பதிப்பு வெளிவருவதற்குப் பலர் காரணமாக இருந்தாலும் பெரும்  உழைப்பு பேராசிரியருடையது எனத் தெளியலாம்.
பேராசிரியர், தமிழில் உள்ள தொகை நூல்களைப் பதிப்பிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். தமிழின் வளத்தை உலகம் அறிவதற்குப் பெரிதும் உதவும் தொகைநூல்கள் கண்டுபிடிப்பு மற்றும் பதிப்பு சென்ற நூற்றாண்டின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த பின்புலத்தில் பேராசிரியர் பதிப்பித்த சங்க இலக்கியம் மற்றும் புறத்திரட்டு ஆகிய இரண்டு தொகை நூல்களும் தமிழின் வளத்தை உறுதிபடுத்தும் மிக அரிய தரவுகளாகும். சி.வை.தா. .வே.சா உள்ளிட்டோர் பதிப்பித்த சங்க இலக்கிய நூல்களை முழுமைப்படுத்தித் தொகையாகப் பதிப்பித்த பேராசிரியரின் அணுகுமுறை, அவரின் நுண்மான்நுழை புலத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. பால்க்ரேவ் தொகுத்த The Golden Treasury  என்ற தொகை நூல் ஆங்கிலக் கவிதை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கி.பி. 1861 இல் வெளிவந்த தொகுப்பு, ஆங்கிலக் கவிதை உலகின் பல பரிமாணங்களைப் பதிவு செய்தது.  இப்பணியை விடச் சிறந்த ஒன்றாகப் பேராசிரியரின் சங்க இலக்கியப் பதிப்பாக பாட்டும் தொகையும் என்ற நூலைக் கூறலாம். அகராதி கலைஞனுக்குரிய அணுகுமுறையில் பதிப்பிக்கப்பட்ட சங்க இலக்கியப் பதிப்பு, தமிழ் பதிப்பில் புதிய முறையியல் ஆகும்.
என்று பேராசிரியர் வீ. அரசுவின் கூற்று வையாபுரிபிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு, முன் வந்த பதிப்பை விட  மாறுபட்ட தன்மையையும், தமிழ் இலக்கியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் அமைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.  அப்பதிப்பு முதற்பதிப்பு முன்னுரையில் இப்பதிப்பு என்ன நோக்கத்திற்காகப் பதிப்பிக்கப்படுகிறது என்ற குறிப்பு காணப்படுகிறது.
இப்பதிப்பை ஆராய்ச்சிக்கு ஓரளவு எளிய வசதி அளிக்கும் குறிப்பு நூலாகக் கொள்ளவேண்டுமே யொழிய, எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் மூலமும் உரையுமாக வெளிவந்துள்ள அருமையான பதிப்புகளுக்குப் பதிலாக இதனை உபயோகிக்கலாம் என்று எவரும் கனவிலும் எண்ணி ஏமாற்றம் அடைதல் கூடாது. அப்பதிப்பிலுள்ள  உரை, விஷய அகராதி, பிரதி பேதங்கள், பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு முதலியன இப்பதிப்பில் இல்லை. உவர் நீர் அருந்தினால் தாகம் மிகுதி என்பதை யொப்ப, இப்பதிப்பைப் பயிலுதல் அப்பதிப்புகளைப் பயன்படுத்தும் வேட்கையைத் தோற்றிப் பெருக்குமென்பதில் ஐயமில்லை. அவ்வரிய பதிப்புகளைப் பயின்றபின் அவற்றுட் காணப்படும் நூற்பொருட்களை எளிதில் நோக்கி உணர்தற்குரிய கருவிநூலாகவும் இப்பதிப்பு பயன்படுதல்கூடுமென்று நம்புவதற்கிடமுண்டு. ஒரு புலவர் பாடிய பாடல்களையெல்லாம் ஒரு சேரப் பாடிகக்கூடிய வசதியே இப்பதிப்பாற் சிறப்பாகக் கிடைப்பது. ஒரு புலவருடைய வாக்கின் திறமை செய்யுளின் பெற்றி, பொருட்செறிவு, சரிதச் சான்று முதலியவற்றை ஆராய்ந்தறிய விரும்புவோர் அவர் பாடல்களனைத்தையும் ஓரிடத்தே படித்துப் பயன்பெற விரும்புவரேயன்றி, ஒன்பது நூல்களைப் புரட்டிப்புரட்டி ஒவ்வொன்றிலும் வேண்டுவனவற்றைப் பொறுக்கியெடுக்கும் சிரமத்தை மேற்கொள்ளச் சிறிதும் விரும்பார். தொகைநூல்கள் ஒவ்வொன்றனுள்ளும் குறித்த எண்களுடைய பாடல்கள் எளிதில் எடுக்கக் கூடிய வசதியும் இப்பதிப்பிலுண்டு. இப்பதிப்பின் இறுதியுள்ள பல அட்டவணைகளும் அகராதிகளும் ஆராய்ச்சியாளர்கட்குப் பயன் தருவனவாகும் (2002, அணிந்துரை)
ஆய்வாளர்கள் மத்தியில் இப்பதிப்பு ஒரு கருவி நூலாகவும், சங்க இலக்கிய வாசிப்புக்குத் திறவுகோலாகவும், ஒரு புலவர் குறித்த பாடல்களை ஒரேயிடத்து தொகுத்து வாசிக்கும் பொழுது, அப்புலவர் குறித்த பன்முகத் தன்மையினை அறியும் வாய்ப்பினையும் உருவாக்கி கொடுத்தது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
சங்க இலக்கிய பதிப்பு உருவாக்கப் பின்ணனி
வையாபுரிப்பிள்ளை தொடக்கத்தில் சங்க இலக்கியத்  தொகுதி என்பது கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள் சேர்ந்தது  கருத்தினார், இதனை 1933 இல் பதிப்பித்த சங்க நூற்புலவர்கள் பெயரகராதிப் பதிப்பு முன்னுரையில் மூலம் அறியமுடிகிறது. ஆனால் 1940இல் இக்கருத்திலிருந்து மாறுபட்டு பாட்டும் தொகையுமாகிய  மேற்கணக்கு நூல்கள் மட்டும் சங்க இலக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார்.
1933 இல் பேராசிரியர் உருவாக்கிய சங்க நூற் புலவர் பெயரகராதி என்னும் பட்டியல்,  அதே ஆண்டின் இறுதியில் தூத்துக்குடி சைவசித்தாந்த சபையினரால் வெளியிடப்பட்ட பொன்விழாமலரில் இடம் பெற்றது. பின்னர் 1934 இல் சமாஜப் பதிப்பாக வெளியிடப்பட்டது. புலவர்களின் வரிசையிலேயே பாடல்கள் தொகுக்கப்பட்டால் சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ளுவதற்கும் ஆய்விற்கும் பேருதவியாக இருக்கும் என்று எண்ணிய சிலர், அக்கருத்தை முன்வைக்க, அதன் விளைவாகச் சங்க இலக்கியப் பதிப்பு உருப்பெறத் தொடங்கியது. 1940 இல் வெளிவந்த சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என்னும் பதிப்பின் முன்னுரையில்,
இப்பதிப்பு, திருத்தமாகவும் செவ்வியமுறையிலும் வெளிவருவதற்குறிய வேலை தொடங்கி இன்றைக்கு ஏழாண்டுகள் ஆகின்றன என்று .பாலசுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார்.
உரையுடன் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், முதலில் மூலம் மட்டுமே பதிப்பிக்கப்பட்டது. பதிப்பதற்குப் பல பதிப்புகள், சுவடிகள் ஒப்பு நோக்கப்பட்டன. மேலும் ஏற்கனவே கிடைத்த சுவடிகளோடு நின்றுவிடாமல் , தமிழ் நாட்டெல்லையுங் கடந்து, கன்னட தேசத்திலுள்ள ச்ரவணபெள்கௌளா என்ற ஊருக்கும் சென்று அங்கு சுவடிகள் எடுக்கப்பட்டு பதிப்புக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
·         உரையின்றி நூல்களின் மூலமட்டும் கிடைக்குமிடத்து பிரதிகளின் மூலத்தை மட்டும் திருத்தம் செய்தல்.
·         உரைகளுமுள்ளவிடத்து அவைகளின் துணைகொண்டு பிரதியிலுள்ள மூலத்தை நோக்கிப் பொருத்தமுள்ள பாடங்கொள்ளுதல்
·         தொல்காப்பிய உரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட விடத்து, அவ்வுரையிற் காணும் பாடத்தோடு ஒப்பு நோக்கித் தகுதியான பாடங் கொள்ளுதல்.

இவ்வாறு ஒப்பு நோக்கப்பட்ட பொழுது கிடைத்த திருத்தங்களும் பல வகைப்படும். ஓரோவிடத்து அச்சுப் பிரதிகளிற் காணப்படாது மறைந்துவிட்ட சொற்கள் புலப்பட்டன என்றும், ஒரு சில விடயங்களில் அப்பிரதிகளிற் காணப்படாது மறைந்துவிட்ட சொற்கள் புலப்பட்டன என்றும் ஒரு சில விடங்களில் அப்பிரதிகளில் மாறுபட்டுக் காணும் சொற்கள் திருத்தமடைந்தன என்றும் ஒருசில விடங்களில் இலக்கணக்குறிப்பு, பாடினோர் பாடப்பட்டோர் குறிப்பு முதலியவற்றில் திருத்தங்கள் கிடைத்தன என்றும் ஒரு சில விடங்களில் அடிவரையறை செம்மையாக அமைந்தது என்றும், இவைகளேயன்றி, பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்தென்று ஓரளவு ஊகித்தற்குரிய பாட்டொன்றும், பரிப்பாடலைச் சார்ந்த்தென்று ஐயுறக்கூடிய பாடற் பகுதியொன்றும் புதியவனவாகக் கிடைத்துள்ளன என்றும் முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இவ்வாறு கிடைத்த குறிப்புகளைத் தொகுத்து  சங்க இலக்கியப்  பதிப்பில் ஓரட்டவணையாக வெளியடவேண்டுமென்று எண்ணியதாகவும், இவற்றின் தொகை நூற்றுக்கணக்கிலிருந் தமையாலும், இவற்றை முழுமையும் வெளியிடுவதால், இப்பதிப்பின் அளவு மிகவும் பெருகும் என்று தோன்றியமையாலும், இவ்வாறு பெருகுவதற்குத் தகப்பெரும்பயன் இல்லாமையாலும் அவ்வட்டவணை வெளியிடப்படவில்லை. பாடிய புலவர்கள் பற்றிய பாடபேதங்களும், ஒரே பாடலை வெவ்வேறு புலவர்கள் பாடியதாகக் காணப்படும் பிரதி பேதங்களும், சங்கநூற் புலவர்கள் பெயரகராதி என்ற நமது வெளியீட்டில் உள்ளன. அக்காரணம் பற்றி அவை மீண்டும் இப்பதிப்பில் வெளியிடப்படவில்லை. அவ்வெளியீட்டின் பின்னர்ச் செய்யப்பெற்ற பரிசோதனையால் அதிற் பிழையெனக் காணப்பட்டவை இப்பதிப்பில் திருத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகின்றார்.
 இப்பதிப்பை இரண்டு வகையாகப் பகுத்துக்கொள்ளலாம்.


1.    சங்க நூல்களைப் பதிப்பதற்கு வகுத்துக்கொண்ட பதிப்பு முறை
2.    பிண்ணினைப்பு
பதிப்பு முறை
முதலில் கடவுள் வாழ்த்துப்பாடல்கள்  நூல்களின் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. அகநானூறு தொடங்கி புறநானூறு ஈறாக தொகுக்கப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலின் இறுதியில் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாதல் வேண்டுமென்று ஊகிக்கப்படுகின்றது. தொல். பொருள். புறத்திணை 26-ஆம் சூத்திரவுரை (நச்.) பார்க்க. என்ற குறிப்பு காணப்படுகின்றது. அதே போல பரிபாடல் கடவுள் வாழ்த்துப்பாடல் அடியில் இந்த அராகங்கள் நான்கினையும் அடிவரையறை செய்ய இயலவில்லை; இளம்பூரணருரையின் ஏட்டுப்பிரதியிற் கண்டபடி கொடுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர், பிரதிகளில் காணப்பட்டவற்றையும், உரையாசிரியர்கள் குறிப்புகளில் காணப்பட்டதுடன் ஒப்பிட்டு அதனை அப்படியே பதிப்பித்துள்ளார்.
பாடல்  தொகுப்பு  இரண்டு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.
1.     புலவர் பெயர் காணப்படுவன
2.     புலவர் பெயர் காணப்படாதன

புலவர் பெயர் காணப்படுவன
·         புலவர் பெயர்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
அகம்பன் மாலாதனார் தொடங்கி சங்க பாடல்கள் பாடிய 473 புலவர்கள் பெயர்களும் அகரவரிசைப்படுத்தப்படுள்ளது.

·         புலவருடைய பாடல்களும் அகரவரிசை
அகநானுறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
குறுந்தொகை
நற்றிணை
பதிற்றுப்பத்து
பத்துப்பாட்டு
பரிபாடல்
புறநானுறு
 புலவர்கள் எண்ணிக்கை எண், அதற்கடுத்து கீழே இப்பதிப்பில் பாடலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண், மூலநூலில் உள்ள பாடலின் எண்அதனைத் தொடர்ந்து திணை குறிப்பு, கீழே பாடல், பாடலுக்கு அடியில் கூற்று பற்றிய குறிப்பு என்ற முறையில்  அமைந்துள்ளது.(.கா)

1.     அகம்பன் மாலாதனார்
1.     நற்றிணை – 81. முல்லை
இருநிலங் குறையக் கொட்டிப் பரிந்தின்
------------------------------------------------
-----------------------------------------------
-------------------------------------வேந்தே

வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகற் குறைத்தது.

புறப்பாடல்களைத் தொகுக்கும் பொழுது பாடலின் அடியில் திணை துறை பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாடவேறுபாடு
பாடங்களை ஊகத்தால் திருத்துவரை வனைமையாக கண்டிக்கின்றார்.
பிரிதிகளின் உதவியின்றிக் கேவலம் ஊகத்தையே கடைப்பிடித்துப் பாடல்களை மாற்றிவிடுதல் அடாத காரியம். இப்பதிப்பில் ஒரு பாடமேனும் ஊகத்தால் திருத்தப்படவில்லை. விளங்காத பாடங்கள் திருத்தற்குரிய வழி ஒன்றுள்ளது. அது பெரு முயற்சிகள் செய்து மேன்மேலும் ஏட்டுப் பிரதிகளைத் தேடிச் சேகரித்து அவற்றினை துணைகொண்டு ஆராய்ந்து உண்மை காணுவதே.
பிரதிகளை ஒப்பு நோக்கும் பொழுது காணப்படும் பாடவேறுபாடுகளையும், புதிதாக அடிகள் காணப்பட்டால் அவற்றையும் அடி குறிப்பில் கொடுக்கும் முறை பின்பற்றப்பட்டுள்ளது.

தண்கடற் சேர்ப்பன்------------  என்னும் ஐங்குறுநூற்று பாடல் அடிக்கு முன்
இவ்வடிக்கு முன்பாக,
                   கணங்கொ ளருவிக் கானகெழு  நாடன்
                   குறும்பொறை நாட னல்வய லூரன்
என்ற அடிகள் சில பிரதிகளிற் காணப்படுகின்றன.

பதிப்பும் சிக்கலும்
இந்நூல்களில் காணப்படும் புலவர்களின் பெயர்களுள் சிலவற்றில் வேறுபாடுகள் உள்ளன. கதப்பிள்ளை, கதப்பிள்ளையார், கருவூர்க்கதப்பிள்ள, கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் போன்று பல வகையாக வரும் பெயர்கள் குறிப்பிடும் புலவர் ஒருவரா, இருவரா, அல்லது பலரா என்பது தெரியாத நிலையில், ஒரு சில ஆதாரங்களுடன் குறிப்பிட்ட வேறுபாடுள்ள பெயரில் இத்தனை பாடல்கள் என வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. ஆனால் ஒருவரே எனத் தரப்பட்டுள்ளவை ஒருவராலும் அல்லது இருவராலும் எனக் கூட இருக்கலாம் எனத் தெளிவின்மையைப் பதிப்பு முகவுரை தெளிவிக்கிறது. மேலும் அது பாடல்களிலுள்ள அகச் சான்றுகளின் துணைகொண்டும், சங்க நூற்புலவர்கள் பெயர் அகராதியின் துணை கொண்டும் மூலமும் உரையுமாக வெளிவந்துள்ள தொகை நூல்களின் துணை கொண்டும், அவற்றில் காணப்படும் பாடினோர் வரலாறு பாடப்பட்டோர் வரலாறு முதலியவற்றின் துணைகொண்டும் ஆராய்ந்து உண்மை காண்பதே அறிவுடைமையாகும். இவ்வாராய்ச்சிக்கு ஒரு சிறு கருவியாக உதவும் அளவிலேயே இப்பதிப்பு அமைந்துள்ள தென்பதை வற்புறுத்துவது நலமெனத் தோன்றுகிறது.

இப்பதிப்பிணை உருவாக்கும் பொழுது, பிரதிகளில் கிடைத்த சில பாடல்கள் சில பொருட்கள் குறித்தும் ஐயங்கள் எழுந்துள்ளன.  இவற்றை ஊகத்தினால் திருத்தக்கூடிய பகுதிகளைத் திருத்தப்படவில்லை. அதற்கான சான்றுகள் கிடைக்கும் பொழுது அவை குறித்த குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளனபின்வருங்காலங்களில் மேற்கொள்ளவேண்டிய ஆய்வினையும் சுட்டி செல்கின்றார்.
பத்துப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் சிலபல பாடல்கள் காணக்கிடக்கின்றன. அவற்றை இயற்றியவர்கள் யாவர் என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். இவற்றுள் திருமுருகாற்றுப்படையின் இறுதியிலுள்ள பாடல்களைப் பற்றித் துணிவாகவே அவை நக்கீரர் வாக்கல்லவெனக் கூறுவார் தொகை பெரிது. இப்பதிப்பில் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து எனக் குறிப்பிடப்பட்ட பாடல் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்கினியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இச்செய்யுளின் ஓசையை நோக்கும் போது, ஒருபால் ஐயமும் இயல்பாக எழுகிறது. தொல்காப்பியத்து மெய்ப்பாட்டியல் 11-ஆவது சூத்திர உரையில் இளம்பூரணர் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடல் பரிப்பாடலாகச் சார்ந்ததாக இருக்கலாம் உறுதியாக கூறமுடியவில்லை.

கலித்தொகை புலவர்களின் பெயர்களைக் குறிக்கும் பாடல் சில ஆண்டுகட்கு முன்பிருந்த அறிஞர் ஒருவராற் பாடப்பட்டதென்றும் பழைய பிரதிகளிற் காணப்பட்டிலதென்றும். சில பேரறிஞர்கள் கூறுகின்றனர். எனினும் இப்பாடலிற் காணும் ஆசிரியருக்குரிய செய்யுளாகவே இப்பதிப்பில் கலித்தொகைப்பாக்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கூறிய பொருள்களெல்லாம் பேரறிஞர்கள் ஆராய்ச்சிக் குரியவென்றும், அவ்வாராய்ச்சிக்கு வசதியளிக்கும் நோக்கமொன்றே கொண்டு இப்பதிப்பில் அவை இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது மிகையாகாது.
பின்னிணைப்பு
·         சங்க இலக்கியகளின் வரலாறு முதலியன
·         சங்க இலக்கியங்களின் பதிப்பு விவரம்
·         சிறப்பு பெயரகராதி
·         புலவர்களும்
·         பாடற்றொகையும் பாட்டெண்களின் ஒப்புநோக்கு அட்டவணையும்
·         புலவர்களின் பெயர் வகை
o    உறுப்பாற் பெயர் பெற்றவர்
o    ஊராற் பெயர் பெற்றவர்
o    ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட புலவர்
o    கோத்திரத்தாற் பெயர் பெற்றவர்
o    சமயத்தால் பெயர் பெற்றவர்
o    தெய்வத்தாற் பெயர் பெற்றவர்
o    தொடராற் பெயர் பெற்றவர்
o    தொழில்முறையால் பெயர் பெற்றவர்
o    நாளாற் பெயர் பெற்றவர்
o    பாட்டு முதலியவற்றால் பெயர் பெற்றவர்
o    பெற்றோரோடு தொடர்ந்த பெயர் கொண்ட புலவர்
o    மரபாற் பெயர் பெற்றவர்
o    வழக்க வொழுக்கத்தாற் பெயர் பெற்ற புலவர்
o    பெண்பாற் புலவர்
o    அரசர்
·         புலவர்களும் அவர்களால் பாடப்பட்டோரும்
·         அரசர் முதலியோரும் அவர்களைப் பாடியோரும்
·         புலவர்கள் அகராதி
·         பாட்டு முதற்குறிப்பு
·         பிரதிகளின் அட்டவணை

மிகுதியாக பாடிய புலவர் கபிலர்(235)
மொத்த புலவர் எண்ணிக்கை(473)
பாடல் எண்ணிக்கை(2279)
புலவர் பெயர் காணாத பாடல்களின் எண்ணிக்கை(102)
மொத்தப்பாடல்(2381)
சங்க இலக்கியம் குறித்த ஆய்வு
. புறத்திரட்டு முதலான பிற தொகை நூல்களுக்கு ஆழ்ந்த முன்னுரைகளை எழுதிய வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியப் பதிப்புக்கு எழுதவில்லை. ஆனால் தொகை நூலகள் குறித்த ஆய்வுரை தேவை என உணர்ந்து 1944 இல் பத்துப்பாட்டு அவற்றின் காலமுறையும் என்கிற கட்டுரையும், 1945 இல் தொகை நூல்களின் கால முறையும் என்னும் கட்டுரையும் எழுதுகிறார். கால முறையில் பத்துப்பாட்டினை வரிசைப்படுத்துகிறார்.
1.     பொருநராற்றுப்படை
2.    பெருபாணாற்றுப்படை
3.     பட்டினப்பாலை
4.    குறிஞ்சிப்பாட்டு
5.    மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி
6.    நெடுநல்வாடை
7.    முல்லைப்பாட்டு
8.    சிறுபாணாற்றுப்படை
9.    திருமுருகாற்றுப்படை
 இவற்றில் சிறுபாணாற்றுப்படை, முதல் எட்டு நூல்களுக்கும் 2 அல்லது 3 தலைமுறைகள் பிற்பட்டும் தோன்றியிருக்க வேண்டும் என்றும் முருகாற்றுப்படை இவற்றிற்குப் பல நூற்றாண்டு பிற்பட்டு இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும், தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் அமைந்ததைப் போல் பின்னெழுந்த முறுகாற்றுப்படை அவற்றைப் பின்பற்றிக் கடவுள் வாழ்த்தாக முதலில் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும் என்கிறார். திருமுருகாற்றுப்படை உரையாசிரியர் உரைப்பதிப்பில் இச்செய்தியைத்  தெளிவுப்படுத்துகிறார்.
இம்முயற்றசியாற் கிடைத்த பிரதிகளின் விவரங்கள் நூலின் இறுதியில் ஒரு தனி அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது.
 தொகை நூல்களின் காலமுறை(1943) என்ற கட்டுரையில், அந்நூல்கள் குறிக்கும் செய்திகளின் அடிப்படையில் தொகை நூல்களைப் பின்வருமாறு வரிசைபடுத்துகிறார்.
1.    குறுந்தொகை
2.    நற்றிணை
3.    அகநானூறு
4.    ஐங்குறுநூறு
5.    பதிற்றுப்பத்து
6.    புறநானூறு
கலித்தொகை, பரிபாடல் குறித்தும் ஆய்வது எளிதல்ல, அது வேறிடத்தில் மேற்கொள்ளப்படும் என்று கூறி செல்கிறார். காவியகாலம் என்னும் நூலில் சங்க இலக்கித்தை முற்சங்க இலக்கியம், பிற்சங்க இலக்கியம் என்று பிரித்து, கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை மூன்றும் பிற்கால இலக்கியம் எனப் பகுக்கின்றார்.  History of Tamil Language and Literature (1956) என்னும் நூலில் 1. ஐங்குறுதொகை 2. குறுந்தொகை 3. நற்றிணை 4. பதிற்றுப்பத்து 5. அகநானூறு 6. புறநானூறு என வைப்புமுறையை மாற்றுகிறார். இறுதியாக ஆய்வின் சங்க இலக்கியக் காலத்தை கி.பி. 2-ஆம் முதல் 3-ஆம் நூற்றாண்டு என்ற கருத்தை பதிவுசெய்கிறார்.

நிறைவாக
·         பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அகராதியல், மொழியில் போன்ற பிற துறை அறிவோடு தமிழ்நூல்களைப் பதிப்பித்துள்ளதால், இதற்கு முன் வந்த பதிப்பிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.
·         சங்க இலக்கிய படல்கள் முழுமையும் ஒட்டுமொத்தமாக பாடிய புலவர்களின் அனைத்து பாடல்களையும் புலவர்களின் அகர வரிசையில் தொகுத்திருப்பதால் ஒரு புலவரை பற்றி ழுமுமையாக புரிந்துகொள்ள இப்பதிப்பு உதவியாக இருக்கும்
·         பதிப்பிக்கும் பொழுது ஊகத்தால் எதனையும் திருத்தாமல் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே பதிப்பிக்கப்படுகிறது.
·         எதிர்காலத்தில் அப்பதிப்புக்குள் நிகழ்த்தப்படவேண்டிய வேலைகளையும் குறிப்பிடுகின்றார்.
·          ஆராய்சியாளர்களுக்குப் பயன்படகூடிய  அட்டவணைகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை
1.    வையாபுரிப்பிள்ளை .எஸ்.,(தொகுப்பும் பதிப்பும்), சங்க இலக்கியம்(பாட்டும் தொகையும்) பாரிநிலையம், இரண்டாம் பதிப்பு, 1967.
2.       ஜார்ஜ். பு., பேராசிரியர் . வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி, திபார்க்கர், பதிப்பு அக்டோபர், 2002.
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…