முல்லைப்பாட்டு



நம்முடைய பழமையான இலக்கியம் சங்க இலக்கியம் என்று கூறக்கூடியது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும்.பத்துப்பாட்டு என்பது பத்துத் தனித்தனி பாடல்களைக் கொண்டது.எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களும் பல பாடல்களால் தொகுக்கப்பட்டது.பத்துப்பாடல்களில் ஒன்று முல்லைப்பாட்டு .பத்துப்பாடல்களில் மிகச்சிறிய அடிகளைக்103 கொண்டது முல்லைப்பாட்டாகும். இப்பாடலைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன் என்பது சிலரின் கருத்தாக உள்ளது.


இயற்கை இன்பத்தில் தோய்ந்து இன்பம் கண்ட நம்முடைய முன்னோர்கள் ,இயற்கையின் ஊடே வாழ்வியல் செய்திகளை நமக்கு அள்ளித் தரும்,இப்பாடல் செய்தியினைப் பார்ப்போம்.
தலைவன் தலைவி பிரிவு நிலையில் அவர்களின் நிலையினை மிக அழகா விளக்குகின்றது.

முல்லைக்குரிய கார்காலம் வந்து விட்டது ஆனால் போருக்குச் சென்ற தலைவனின் தேர் வரவில்லை. தலைவன் பிரிவை எண்ணி பொறுக்காத தலைவியின் கண்கள் துயில மறுக்கிறது.கண்களில் தலைவனை எண்ணி கண்ணீர் முத்துப் போல் கண்ணீரை உதிர்ந்துகொண்டே இருக்கின்றது. பசலை நோயினால் கைவளையல்கள் நெகிழ்கின்றன.அதனைத்திருத்துகின்றாள்.அவளுடைய உடல் அம்பு தைத்த மையில் போல நடுங்குகின்றது,அதனால் அவள் அணிந்துள்ள அணிகலன்கள் நெகிழ்கின்றன.இப்படி தலைவி படும் துன்பத்தைக் கண்ட வீட்டில் உள்ள மூத்த பெண்கள் அவளுக்கு இனிய மொழிகளில் ஆறுதல் வார்த்தைகள் கூறுகின்றனர்.

தலைவன் இந்நாட்டையும் மக்களையும் காக்க செல்வது தவிர்க்க முடியாதது என் எடுத்துக்கூறுகின்றனர்.தலைவியின் மனமோ இச் சொற்களால் தெளிய மறுக்கின்றது. கவலையுடனே காணப்படுகின்றாள்.அம்முது பெண்கள் தலைவியின் நிலையை எண்ணி வருந்தி நற்சொல் கூறுபவர்களிடம் சென்று நற்செய்தி கேட்டு வந்தால் தலைவியின் மனநிலையில் மாற்றம் வரும் என நம்பி,அவர்கள் நற்சொல் கேட்க செல்லுகின்றனர்.

நற்சொல் கேட்க செல்லும் போது ஒரு நாழியில் நெல்லையும் முல்லை மலரையும் கொண்டுச் செல்லுகின்றனர்.
நெல்லையும் முல்லை மலரையும் தெய்வத்தின் மேல் தூவி நற்சொல் கேட்க நிற்கின்றனர்.அப்பொழுது ஆயர்குலத்தைச் சேர்ந்த பெண்மகள் ஒருத்தி தாய் பசுவைக் காணாமல்,பாலுக்கு ஏங்கி தவித்து, வருந்தி நிற்கும் கன்றுகளை நோக்கி,உங்கள் தாய்மார்கள் வயிறு நிறைய உண்டு விரைவில் திரும்புவார்கள் என்று கூறுகின்றாள்.

அவள் கன்றுகளைப் பார்த்துக் கூறும் நற்சொல்லைக் கேட்டு,முதுபெண்டிர் பேருவகை அடைகின்றனர்.தலைவியிடம் இந்நற்சொல்லினால் உன் தலைவன் போரில் வெற்றிவாகை சூடி,பொருள்களுடன் உன்னைக்காண விரைவில் வருவார் எனக் கூறியதைக் கேட்டு தலைவி தன் துன்பத்தில் இருந்து நீங்குகின்றாள். தலைவன் போருக்குச் செல்வது நாட்டு நலனுக்கான எனவும் உணருகின்றாள்.


தலைவன் வரவை நோக்கி இருக்கும் தலைவியின் நிலை

தலைவனுக்ககா தலைவி காத்திருக்கும் நிலையினைப் புவலர் எழிலோவியமாகச் சித்தரிக்கின்றார்.
சக்கரத்தையும் வலம்புரிச்சங்கையும் தாங்கிய பெரிய கைகளையும்,இலக்குமியைத் தாங்கும் மார்பினையும் உடைய திருமால் ,மாவலி சக்கரவர்த்தியிடம் குள்ள வடிவில் சென்று மூவடி மண்கேட்டார்.அதனை வழங்க முன் வந்து மாவலி நீரால் தாரைவார்த்துக் கொடுக்க அந்தகணத்தில் ,திருமால் நெடியவடிவு கொண்டார்.அவர் கொண்ட நெடிய வடிவத்தைப் போல கடலில் உள்ள நீரை பருகிய மேகங்கள் உயர்ந்து மலையில் தங்கி மாலைக் காலத்தில் மழையைப் பொழிந்தன.அரண்மனையில் பள்ளியறையில் பொற்பாவை ஏந்தி நின்ற தகளி விளக்குகள் நின்றெரிந்தன.ஏழுநிலை மாடத்தின் மூட்டுவாய்களில் இருந்து சொரிகின்ற நீர்தாரையின் ஓசைகள் ஆராவரிக்கின்றன. இவ்வாறு தலைவன் வருவேன் என்று கூறிச் சென்ற காலம் வந்துவிட்டது,அவர் சொல் மாறமாட்டார் தவறாது வந்து விடுவார் என்ற எண்ணத்துடன் தலைவி படுகையில் கிடக்கின்றாள்.


பாசறை அமைத்தல்

பகை மேற்சென்ற அரசனது படைவீரர் காட்டாறு சூழ்ந்த காட்டிடத்தே பிடவம் முதலிய புதர்களை வெட்டினார்கள் ;பகைப் புலத்தே காவல் காத்து நின்ற வெட்டுவர் அரண்களை அழித்தார்கள்;அரணாக நாற்புறமும் முள் வேளி இட்டார்கள்;அதன் நடுவே பரந்த பாடிவீட்டை அமைத்தார்கள்.அரசன் அப்பாசறையினிடத்தே,ஒருகையைப் படுக்கையின் மேல் வைத்தும் ஒரு கையை முடியுடன் சேர்த்தியும் இருந்தது,யானையை எறிந்து பட்ட வீரரை நினைந்தும் அம்பு தைத்த வருத்தத்தால் செவி சாய்த்துப் புல்லுண்ணாமல் நிற்கும் குதிரைகளை நினைந்தும்,இப்படை நொந்த அளவுக்கு நாளை எவ்வாறு பொருதும் என்று நினைந்தும் வருந்துவான்.அப்பாசறையில் தங்கும் பல மொழிகளைப் பேசும் படை வீரருக்கு நடுவில் ஓரிடத்தை அரசனுக்குக் கோயிலாக எல்லாரும் அமைத்தார்கள்;கால்களைக் கூடமாக நட்டார்கள்;கயிற்றை வளைத்துக் கட்டினார்கள்;வலிய விற்களை ஊன்றினார்கள்.அவற்றின் மீது துணிகளைத் தூக்கினார்கள்.அத்தோற்றம் முக்கோல் அந்தணன் முக்கோலில் தனது காவி உடையை இட்டு வைத்து தன்மையை ஒத்திருந்தது.பின்பு பூத்தொழிலைத் தலையிலுடைய எறிகோல்களை ஊற்றினார்கள்;பரிசுகளை நிரையாக வைத்தார்கள்;பல நிறமூட்டிய துணிகளைக் குத்துக் கால்களில் தைத்து அவற்றை வளைத்து வைத்தார்கள்.இவ்வாறு அமைக்கப்பட்ட அரசனது கூடாரத்தின் வாயிலில் சட்டையிட்ட வலிய யவனர் புவியைச் சங்கலியிற் கட்டிவைத்த வடிவனை எழுதினர்.


அரசனது இல்

அங்குக் காலத்தின் அளவை அளந்து சொல்லுவோர் அரசனை வணங்கி வாழ்த்தி நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்தனை எனக் கூறினர்.அப்போது தூவெண்துகிலுடுத்த பெண்கள் ஆலத்தி எடுத்தார்கள்.
அரசன் திரைச்சீலை தொங்கவிடப்பட்ட உள்ளறையில் துயிலும்படி சென்றான்.

பாசறைக் காட்சி

தெருவின் நாற்சந்தி தழைகளால் வேயப்பட்டிருந்தநு.அங்குக் காவலாக நிறுத்தப்பட்ட நானை கரும்பையும் நெற் கதிரோடு கலந்து கட்டிய இலையையும் அதிமதுரத் தழையையும் இண்ணாது அவற்றால் தனது நெற்றியைத் துடைத்தும் கொம்பின் மூது இட்ட தனது நெற்றியித்தே அவற்றைக் கொண்டும் நின்றது;யானைப் பாகர் நானைப் பேச்சாகிய வடமொழியைச் சொல்லிக் கவர் உடைய பரிக்கொலால் கவளத்தை உண்ணும்படி குத்தினார்கள்.சிற்றாட்கள் நெய் கொப்பளிக்கின்ற திரிக்கழாயில் நீண்ட திரிநைக் கொண்டு ஒழுங்காயமைத்த விளக்குகளைக் கொளுத்தினார்கள்.விளக்குகள் அவியுந்தோறும் தம் கையிடத்துள்ள பந்தத்தைக் கொளுத்தினார்கள்.

அரசன் வெற்றி பெறும் மீளுமிடத்து வழியிற் காணும்காட்சி

தலைப்பாகையும் சட்டையும் தரித்து மெய்க்காப்பாளர் அரசனைக் காவலாகச் சூழ்ந்த திரிந்தனர்.சட்டையிட்ட ஊமராகிய மிலேச்சர் பள்ளி கொள்ளுமிடத்தைச சூழ்ந்து திரிந்தனர்.இவ்வாறு மணிநோசை அடங்கிய நடுச்சாமத்தும் மற்றையநாள் நிகழவிருக்கும் போரைநினைந்து அரசன் துயில் கொள்ளாலாயினான்.அடுத்தநாள் அவன் பகைவரைக் கொல்லக் கருதி வைத்து வாளைப் பிடித்து வெற்றியைப் பெற்றான்;பகை அரசர் விரும்பும் நிலங்களை வென்ற வெற்றின் அடையாளமாக வெற்றிக்கொடியை உயர்த்தினான்.அவன் மீண்டு வரும் காட்டு வழியிலே காயா கரிய பூக்களைப் பூத்தது.கொன்றை பொன்னிற மலர்களை மலர்ந்து;வெண்காந்தள் உள்ளங்கையைப் போல் விரிந்தது.முறுகிய கொம்புடைய ஆண்மான் பெண்மானோடு துள்ளிவிளையாடிற்று;திரண்ட தோன்றி மலர் இரத்தம் போல் பூத்திருந்தது.வெற்றிக் கறிகுறியாகிய கொம்பும் சங்கும் முழங்கின.நிரைத்த சேனைக்கும் குதிரைப் படைக்கும் முன் வந்த அரசனது தேரிற் பூட்டிய குதிரைக்ள தலைவியின் செவியில் நிரம்பும்படி ஆரவாரித்தன.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விளக்கம் நன்றாக உள்ளது,
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஞானசேகரன் உங்கள் வருகைக்கு நன்றி.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் விளக்கவுரை மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.
ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும் வாழ்துக்கள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணசீலன்.
கலையரசன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/index.asp
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கலையரசன்.நீங்கள் வடலூர் என்று அறிந்து மகிழ்ந்தேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்