முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருக்குறள் பரிதியார் உரை

தமிழ் சூழலில் இடையறவு படாமல் வாசிக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்ட/செய்யப்படும் பிரதியாக விளங்குவது திருக்குள். இடைக்காலமாகிய 9 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் பனுவல்களுக்கு உரைகள் பல தோன்றின. இடைக்காலத்தை உரையெனும் கயிற்றால் பிணிக்கப்பட்ட காலம் என்பர் வ.சுப. மாணிக்கனார். திருக்குறளுக்கு எழுந்த முதலுரை/கிடைத்த உரை மணக்குடவர் உரை. இருப்பினும் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் பல பதிப்புகளைக் கண்டதும் மிகுதியாக வாசிக்கப்பட்டதும், உரைக்கே பல உரை தோன்றியதும் பரிமேலழகர் உரை. பரிமேலழகருக்கு முந்தைய உரையாளர்கள் ஒவ்வொரு அதிகாரத்துள்ளும் குறள் வைப்புமுறையை தங்கள் வாசிப்புக்குத் தக மாற்றி வாசித்திருந்தாலும் இன்று நாம் பரிமேலழகர் குறள் வைப்பு முறையினையே பின்பற்றுகின்றோம்.ஆய்வுலகில் புதிய புதிய முறைமைகளைப் பயன்படுத்தும் இற்றை நாட்களில் பழம் பிரதிகளை மறு வாசிப்பிற்கு உட்படத்த வேண்டிய தேவை உள்ளது. அந்நிலையில் பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு உரையெழுதிய பரிதியாரைப் பற்றிய உரையாடல் அவசியமாகின்றது.


பரிதியின் உரையில் இலக்கணச் செறிவோ, இலக்கிய நுட்பமோ இருப்பதைப் பார்க்க முடியாது. ஆனாலும் இவர் உரையினை வாசிக்கப் புகும் வாசகன் அவ்வுரையில் ஒரு எளிமைத் தன்மை இருப்பதை உணரலாம். பரிதியார் வைதீகப் பின்னணியில் சைவ சமயம் சார்ந்த கருத்தாடலை குறள் விளக்கத்திற்குப் பயன்படுத்துகின்றார். இவரது உரை பொழிப்புரை போன்றோ விளக்வுரை போன்றோ அமையாமல் குறள் கருத்தினையறிந்து கொண்டு தம் விருப்பத்திற்கேற்றப, மிகுத்தும் குறைத்தும் பொருள் கூறுகின்றார். மேலும் சில குறள்களுக்கு விளக்கம் தரும்போது ஒன்றை வரியிலும், சில குறள்களுக்குப் புராண கதைகளை மேற்கோளாகவும், பிரசங்கம் போலவும், காணப்படுவதோடு சில இடங்களில் குறளுக்கும் பொருளுக்கும் தொடர்பு இல்லாத நிலையினையும் காணமுடிகின்றது. வடசொற்களும், வழக்குச் சொற்களும் மிகுந்து காணப்படுகின்றது. குறளுக்கும் இவரது உரைக்கும் ஒற்றுமைப் படுத்தி அறிந்து கொள்ளுதல் ஒரு கயிற்றலாகிய பாலத்தில் காவிரியைக் கடக்க நினைத்தலை ஒக்கும் என்பர் ச.தண்டபாணி தேசிகர். இவரது உரையில் பாலின் தொடக்கத்தில் விளக்கவுரையோ, இயல் பிரிப்புப் பற்றிய ஆராய்ச்சியோ இல்லை. அதிகார முறை வைப்பைத் தொடர்ப்பு படுத்தி காட்டல், ஒரே அதிகாரத்திற்குள் குறட்பாக்களைப் பொருள் நோக்கிப் பிரித்து அமைத்தல் ஆகிய முறைகள் இல்லை.பெயர் விளக்கம்


பருதியார், பரிதியார் என அழைக்கபெறுகின்றார். பரிதி பருதி இரண்டுமே வட்டதைக் குறித்து ஞாயிற்றைக் குறிக்கும் பெயர்கள். பரிதியார் என்னும் பெயர் பாடலின் எதுகை நோக்கி பருதியார் என வழங்கப்பட்டது எனலாம்.

பரிதியார் என்னும் பெயரினைக் கொண்டு இவர் ஊர் தஞ்சைக்கருகில் உள்ள திருப்பரிதி நியமமாகயிருக்கலாம் என மு.வை. அரவிந்தன் கருதுகின்றார். இக்கோயில் பாடல் பெற்ற தலமாக அமைந்துள்ளது. திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இவ்வூரைப் பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதி நியமம் எனக் குறிப்பிடுகின்றார்.


பரிதியார் உரை - பதிப்பு


1811 இல் திருக்குறள் மூலநூல் அச்சேற்றப்படுகின்றுது. அதன் பிறகு பரிமேலழகர் உரையுடன் பலமுறை அச்சேற்றப்பட்டது. பரிதியின் உரை 1935- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.தண்டபாணி தேசிகரும் 1938- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.மெய்ப்பன் வள்ளுவம் இதழிலும் குறிப்பிடுகின்றனர். பதிப்பித்தவர் துடிசைகிழார் என்னும் குறிப்பினைத் தருகின்றார். துடிசைகிழார் கிருஷ்ண விலாச பிரஸ்,கோயம்புத்தூரில் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு மறைமலையடிகள் நூலகத்தில் 14 அதிகாரத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது. இப் பதிப்பில் பரிதியாரின் குறள் வைப்பினைப் பின்பற்றி, மணக்குடவர் ,பரிமேலழகர் வைப்பு முறையின் எண்ணைக் குறிப்பிட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பு பக்கத்தில் திருக்குறள் – பரிதியுரை By துடியைகிழார் என்றும் கிருஷ்ண விலாசபிரஸ், கோயம்புத்தூர் என்ற குறிப்பு மட்டும் காணப்படுகின்றது. ஆண்டு பற்றிய எந்த குறிப்பும் குறிப்பிடப்படவில்லை.


இதன் பிறகு பரிதியார் உரை தனித்து பதிப்பிக்கப்பட்டாதாக தெரியவில்லை. 1951 இல் திருக்குறள் பழைய உரைகள் தொகுப்புகளாக தொகுக்கப்பட்ட போது பரிதியின் உரையும் தொகுக்கப்பட்டுள்ளது


ச.தண்பாணி தேசிகர் 1951 இல் தொகுத்த திருக்குறள் உரைவளம் பதிப்பு முன்னுரையில்


இப்பதிப்பு வெளிவர ஒப்புநோக்க்க் கிடைத்த ஏடுகள் பல செய்யமற் செய்த உதவியையுடைய ஏடு தேடித் தந்த இன்றமிழ்ப் பெருமக்களை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

1. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பரிதியுரை 1

2. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் காலிங்கர் உரை 1

3. இலக்கண விளக்கம் சோமசுந்த தேசிகர் வீட்டுப் பிரதி பழைய உரை 1

4. தரும்புர ஆதீனத்துப் புத்தகசாலைப் பிரதி, பரிமேலழகர் உரை

இங்ஙனம் ஏடுகள் அளித்து தமிழாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் அடியேன் செய்யும் கைமாறு யாதுளது என்று குறிப்பிடுகின்றார்.


1963 இல் கோவை இராம கிருஷ்ணா மடம் வெளியிட்ட திருக்குறள் ஆராச்சி பதிப்பு என்னும் தொகுப்பிலும், 1969 இல் திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்டுள்ள திருக்குறள் உரைக்கொத்திலும் பரிதியின் உரை தொகுத்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. ச. தண்டபானி தேசிகர் 1981 இல் மீண்டும் மதுரைப் பதிப்பகத்தின் வழி திருக்குறள் உரைக் களஞ்சியம் என்னும் தொகுப்பினைப் கொண்டு வந்துள்ளார்.


காலம்


பரிதியாரின் காலத்தைச் சில அகப் புறச் சான்றுகளின் வழி அறியலாம். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆட்சிப்புரிந்த விசய கண்ட கோபாலன் என்னும் தெலுங்கு சோழனின் 22 ஆம் ஆட்சியாண்டில் கி.பி(1271)கிடைத்த கல்வெட்டு ஒன்றில் வண்துவரப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதன் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றது. இப்பெயர் பரிமேலழகரையே குறிக்கிறது என்பர். பெருந்தொகைப் பாடல் ஒன்று,


செவ்வி முப்பாலுக்கு

ஒர்உரை யின்றி ஒன்பது சென்றும்

ஐயுற வாக நையுறு காலை

குறட்பாத் தமிழ்மனு நூலிற்கு

விழுபொருள் தோன்ற விரித்தினிது உரைத்தனன்

பரிமேலழகன் எனப் பெயர் படைத்துத்

தரைமேல் உதித்த தலைமை யோனே


எனக் குறிப்பிடுவதால் பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் எனபதும் அவர்களுள் பரிதியாரும் ஒருவர் எனபதும் தெளிவாகின்றது. தனிப்பாடலும் பரிமேலழகருக்கு முன் பரிதியாரைக் குறிப்பிடுகின்றது. மேலும்,


இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள (223)


என்ற குறளுக்குப் யான் வறியவன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், இவை இரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே என்று விளக்கம் கூறிய பின்னர் பரிமேலழகர்


இனி இலனென்னும் எவ்வம் உரையாமை என்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையில் கொடுத்தல் எனவும் உரைப்பார் உளர் என மணக்குடவர் மற்றும் பரிதியின் உரைகளை எடுத்துக்காட்டுவர்.அதே போல்


நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்

பகையும் உளவோ பிற (304)


என்னும் குறளுக்கு முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும் எனப் பரிதியார் உரையைப் பின்பற்றி பரிமேலழகர் முகத்தின்கண் நகையும், மனத்தின்கண் உவகையும் கொன்று கொண்டு எழுகின்ற சினம் என உரைக்கின்றார்.


பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையைச் சில குறளில் அப்படியே எடுத்து ஆண்டுள்ளார். ஒழுக்காறாக் கொள்க(616), கொடுப்பது அழுக்கறுப்பான்(163), அவ்வித்து அழுக்காறு(167),பல்லார் முனிய(191),நயனிலன்(193) நயன்சாரா(194) அதேபோல குறள் வைப்பு முறையிலும் காலிங்கரும் பரிதியும் பெரிதும் ஒத்துக்காணப்படுகினர்.


புறப்பொருள் வெண்பாவில் குறிப்பிடப்படும் எண்வகை மாலையினையும், ஆண்டாள் குறிப்பிடும் மார்கழி நீராடலையும் பரிதியார் தமது உரையினில் குறிப்பிடுவதால் அவர்களுக்குப் பின் வாழ்ந்தவர் என அறியமுடிகின்றது


பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் என்பதும், பரிமேலழர் உரையில் பரிதியார் உரையை எடுத்துக்காட்டியும் அவர் உரையைப் பின்பற்றி உரை எழுதியுள்ளமையிலிருந்தும் பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையை பின்பற்றுவதாலும். ஐயனாரிதனார், ஆண்டாள் பாடல்களில் காணப்படும் எட்டுவகை மாலை மார்கழி தீர்த்தம், பற்றி குறப்பிடுவதில் இருந்தும் பரிதியார் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதலாம். எனவே பரிதியாரின் காலம் பரிமேலழகருக்கு முன் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளலாம்.


சமயம்


பரிதியார் சைவ சமயம் சார்ந்தவர் என்பதற்கு இவரது உரையிலேயே பல சான்றுகள் உள்ளன. கடவுள் வாழ்த்தில் கற்றதனாலாய என்னும் குறளுரையில் நற்றாள் என்பதற்குச் சிவன் ஸ்ரீபாதம் என்று பொருள் உரைகின்றார். மலர் மிசை ஏகினான் என்பதற்கு பக்தசனங்களிட்ட புஷ்பத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் ஸ்ரீபாதம் எனவும் இறைவன் பொருள் சேர் புகழ் என்பதற்குச் சிவகீர்த்தி என்றும் அறவாழி அந்தணன் என்பதற்கு தன்மம் என்னும் சமுத்திரமாகவுள்ள பரமேசுவரன் என்றும் பொருள் கூறுகின்றார். கோளிற் பொறியில் குணமிலவே (9) என்னும குறளில் எண்குணத்தான் எனபதற்கு எட்டுகுணமாவன அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம்,நாம மின்மை, கோத்திரமின்மை, அவா வின்மை, அழியா இயல்பு எனச் சைவ சமய சார்பாக விளக்கம் தருகின்றார்.


வாய்மை அதிகாரத்தில் உள்ள பொய்யாமை அன்ன என்னும் குறளில்(269) எல்லா அறமும் தரும் என்பதற்குச் சிவபுண்ணியம் எல்லாம் உண்டாம் என்கிறார்.


பொருட்பாலில் முறைசெய்து என்னும குறளுரையில்(388) மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்பதற்கு உலகத்தை இரட்சிக்கின்ற பரமேஸ்வரன் என்று எண்ணப்படும் என்றும் யான் எனது(310) என்னும் குறளுரையில் துறந்தார் என்பதற்கு தொண்ணூற்றாறு தத்துவத்தையும் உடலோடே துறந்தார் என்றும் பொருள் கொள்கிறார்.


.

மணிப்பிரவாளம்


மலர்மிசை (3) – பக்த சனங்களிட்ட புஷ்பத்தின்மேல் எழுந்தருளி இருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை மனசிலே பற்ற வைத்தார் பூமியின் கண் சகல பாக்கியமும் அனுபவிப்பார்.


வீழ்நாள் படாஅமை(35) – அவமே நாட்போகாமல் தன்மமே செய்க. அது இனிமேல் சென்மமே இல்லாமல் சென்ம வழியை அடைக்கும் கல்.


புகழ்புரிந்(59) – இன்னாள் பதிவிரதை என்று சொல்லும் சொல் பெறாத மடவாரை மனையாளாகவும் உடையான். தன்னை வேண்டார் முன்னே இன்னார் ரிஷபம் போல திரிகிறான் என்று ஏசுதற்கு இடமாவான்.


இடிப்பாரை(447) – அடிச்சுப் புத்தி சொல்லுகின்ற பெரியோரையல்லாமல் தன் விபரீத புத்தியினாலே மிகுந்த மன்னவன், கெடுப்பார் இல்லாத போதும் தானே கெடுவான்.


இருநோக்கு(1091) – இரண்டு பார்வை உண்டு நாயகிக்கு ஒரு பார்வை விரகம் தரும். ஒரு பார்வை விரகத்துக்கு மருந்தாகிய அமுதப் பார்வை கொடுக்கும்.


வழக்குச் சொல்


நானாபதார்த்தம்(52),வேணும்(116) கனவிலும் பிறவாது(139) எப்படி என்றால்(140)வயிறு வளர்ப்பது(183) சுட்டுப்போடும்(202),பூமிவெட்டுகிற பேரையும் தாங்கும்(151) தன்ஆன்மா ஈடேறப் பார்பானை(268) சுட்டசோறு, மண்ணினால் பண்ணின பொம்மை(407) சிரிக்கச் சொல்லிக் கெடுக்காமல், அடிச்சு புத்தி சொல்லுகின்ற பேர்(447)


கதையுடன் கூடிய உரை


பெற்ற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பொருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு(58)

பர்த்தாவும் பூலோகமும் இவன் பதிவிரதை என்னும் மனமகிழ்ந்த கற்பினால் பெறுவள் தேவர்கள் செய்யும் சிறப்பை. இதற்கு ஒப்பனைகள் கண்ணகியாளைக் கண்டு கொள்க.கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு(269)

தலையெழுத்து முடிந்துவர அப்போது கூற்றுவனையும் வெல்லலாம். தவத்திற் பெரியர்க்கு அதற்கு நந்திகேசுவர தேவனையும் மார்கண்டேயனையும் கண்டு கொள்க.யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற(300)

ஆத்மாவைச் சென்னத்திலே தள்ளாமல் திருவடியிலே சேர்ப்பது சத்தியவாக்கியம் அன்றி, வெறொன்று கண்டிலேம்; அசத்தியம் சொன்ன தரும்புத்திரன் நரகங்கண்டான் சத்தியம் சொன்ன அரிச்சந்திரன் ஸ்ரீ பரமேஸ்வரன் பாதம் கண்டு சிவலோகம் சேர்ந்தான்.பிரசங்கம் போன்ற உரை

நோயெல்லாம் நோய்செய்தார் மேலாவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்(326)

ஒருவருக்குத் தான் செய்த விதனம், பின்பு தனக்கு வருகின்ற படியினாலே ஒருவருக்கும் தாங்கள் விதனஞ் செய்யார். அஃது எப்படி என்றால், பிரம்மராட்சதன் ஒரு ராசாவின் மகளைப் பற்றி நின்று சந்தியாவதனம் செய்ய ஆற்றங்கரையிலே வந்து நின்றளவில், பிராமணப் பிள்ளையின் பிள்ளை வாசிக்கிறவனுக்கு அன்றையிற் பாடம் இந்தக் குறள் ஆகையால் அவன் முகசுத்தி பண்ண வந்தான். இதைப் பிரம்மராட்சதன் கேட்டுத் தானொரு பிராமணவடிவாய், இந்தப் பிள்ளை வாய்பாடத்தை இரண்டு பிரகாரங் கேட்டு , நாம் இராசாவின் மகளை நோய் செய்தோமே, நமக்கு அந்த விதனம் பிறகே வரும் என்று பயப்பட்டு, இந்தப் பிள்ளை முன்னிலையாக இராச குமாரத்தியை விட்டுப்போச்சு .கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கு அதுவிளிந் தற்றே(332)

சந்தையிற் கூட்டம் நாலுபேரும் ஆறுபேரும் வந்து சந்தையில் காரியங்க்கண்டு மீண்டும் போவார்கள்.அப்படி அல்ல செல்வம் எப்படி என்றால், கூத்தாடல் பார்க்க நாலு பேரும் ஆறுபேரும் வந்து கூத்துக்கண்டு, கூத்துக் குலைந்த போது ஒருகாலே பிரிந்து ஒடுவார்கள். அதற்கு ஒக்குமே செல்வத்தின் கூட்டம், எப்படி என்றால் இவன் செய்த புண்ணியத்திற்குத் தக்கதாக இலட்சுமி இருப்பாள், இவன் தவசு மாறி இலட்சுமி போன பின்பு அக்கினி, கள்ளார், இராசா, ஆறு இவையிற்றினாலே செல்வம்போம், இஃது அறிந்து உள்ளபோதே தன்மம் செய்வான் என்றவாறு?உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்

நல்லோரும் நல்லோரும் மனப்பூரணமாகக் கூடியிருந்து. பிரிகிறபோது ஒருவரை ஒருவர் அனவரதகாலமும் நினைத்திருப்பர்.அதுபோல,கற்கும்போது பிரியத்துடனே கற்க, கற்றுவிட்டால் கற்ற கல்வியை மறவாது அதிகரிக்க.குறளினும் சுருங்கியபொருள்

ஏரி னூழார்அ ருழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்

உழவர் ஏருழார் ; மேகம் மழை பெய்யாவிடில்

அகனமர்ந்து செய்யா ளுரையு முகனமர்ந்து

நல்விருந் தோம்புவா னில்(82)

மனமகிழ்ந்து விருந்து செய்வானிடத்தில் லட்சுமி உறையும்


உறங்கு வதுகோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு(339)

நித்திரை போல மரணம் விழிப்பது போல பிறப்பு


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்(907)

நாயகர் வாராக்காலும் நித்திரை இல்லை ; வந்தாலும் கலவியினால் நித்திரை இல்லை.


சமூக நிலை


பொறை ஒருங்கு(733(கேடறிய(736)ஆங்கமை(740) என்னும் குறள்களில் வேந்து, இறை என்னும் சொல்லுக்குப் பிற உரையாசிரியர்கள் அரசன், வேந்தன், காவலன் என்று உரையெழுத பரிதியார் நாட்டாமைகாரண் என்றே எழுதுகிறார்.


தெய்வம் தொழாஅள்(55) குலதெய்வம் கும்பிட்டாள் தன் பர்த்தாவை தெய்யவமென்று தொழுதபடியால் அவள் சொல்ல மழைபொழியும் மார்கழித் தீர்த்தம், மகா தீர்தம் ஆடல்(278) யாண்டுச்சென் றியாண்டும்(895) இதற்கு எங்கு சென்றாலும் எனப் பிற உரையாசிரியர்கள் உரையெழுத எந்த தேசத்தில் போய் பல தீர்த்தம் ஆடினாலும் என உரை வரைகின்றார்.


வறியார்க்கொன்(221) இதற்கு வறியார்க்குக் கொடுப்பதே கொடை மற்றெல்லாம் வட்டிக்குக் கொடுப்பதை ஒக்கும் உள்ளத்தா லுள்ளலுந்த தீதே(282) தவஞ்செய்வார்க்குப் பக்தர்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே ஒரு திருப்பணி போலே காட்டி வாங்குதல்தன்னுயிர் நீப்பினும்(237) தன்னுயிர் துறக்கும் காலமாகினும் இது பிழைக்கும் என்று ஆடு, கோழி, பன்றியினைப் பிராத்தனை செய்வான் அகனமர்ந்து தீதலின்(92) மனமகிழ்ந்து சொர்னதானங் கொடுப்பதைக் காட்டிலும்


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து (738)

இக்குறளுக்கு விளைவு என்பதற்கு விளைவுடமை என மணக்குடவரும், பரிப்பெருமாளும் கூற, விளைநுகர் பொருளென காலிங்கர் கூற, பரிமேலழகர் விளைச்சல் என்று கூற பரிதியார் பதினாறு தானிய விளைவு என்று கூறுகின்றார் நெல்,புல், வருகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இருசி, எள்ளு, கொள்ளு, பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை

சந்தை குறித்த செய்தி


குறள் வைப்புமுறைபரிதியார் பால் குறித்த விளக்கங்களோ ,குறள் வைப்புமுறை குறித்த ஆராய்ச்சியோ செய்யவில்லை. அதிகாரத்திற்கு விளக்கம் சுருங்கிய வடிவில் கூறுகிறார். 36 அதிகாரங்களுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்திற்கு விளக்கம் கூறுகையில் யாதொரு காரியமும் பதறாமல் விசாரித்துச் செய்யவேணும் எனக் கூறுவது, மணக்குடவரும் பரிமேலழ்கரும் அமைச்சர் முதலாயினரை ஆராய்ந்து தெளிதல் என்று கூறும் விளக்கத்தினும் செய்யும் வினையை ஆராய்ந்து செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்புடையது


குறள் வைப்பு முறையில் உரையாசிரியர்கள் பலரும் முதற் குறளில் 22 அதிகாரங்களிலும், இறுதிக் குறளில் ஒன்பது அதிகாரங்களிலும் ஒன்றுபடுகின்றனர். சிலருக்குத் தொடக்க்க் குறளாக அமைந்த்து பிறருக்கு முடிவாவும், பிறர் முடிவாகக் கொண்ட குறள் மற்றவருக்குத் தொடக்கமாகவும் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகின்றது. முதற்குறளிலும் பரிதியும் காலிங்கரும் பெரும்பான்மை ஒத்துச் செல்கின்றனர்.பாடவேறுபாடு

பரிதியார் பிறர் கொண்ட மூலப்பாடத்திலிருந்து 21 குறட்பாக்களில் 22 இடங்களில் வேறுபடுகின்றார்.


பாடவேறுபாட்டுக்காண காரணம்


1. ஏடெழுதுவோர் பிழைபட எழுதுதல்

2. ஏடுபடிப்போர் பிழையாகப் படித்தல்.

3. ஏடுபடித்து சுவைப்போர் பாடங்களை மாற்றுதல்

4. ஏடுகளைப் பதிப்போர் திருத்தியும், புதுக்கியும் வெளியிடுதல்.


பரிதியார் பரிமேலழகர்


1.துப்பாற்குத் துப்பார்க்குத்(12)

2.கணமேனும் கணமேயுங்(29)

3.தீண்டில் தீண்டல்(65)

4.சொற்கேட்கில் சொற்கேட்டல்(65)

5.இமைப்பிற்கெடும் நினைக்கப்படும்(169)

6.நன்மையும் நீங்கும் நன்மையின் நீங்கும்(194)

7.நல்லார் எனினும் நல்லாறு எனினும்(222)

8.ஆகும் ஆளும்(251)

9.கொள்வேம் கள்வேம்(282)

10.தனத்தொடு தவத்தொடு(295)

11.அனைய அனையர்(310)

12.இன்னா செய்யாமை மாணா செய்யாமை(317)

13.நலன் இலன்(314)

14.செவிக்குணர்வு செவிக்குணவு(412)

15.செவியுணர்வின் செவியுணவின்(413)

16.கேள்வியஃதில்லார் கேள்வி அல்லார்(419)

17.கைதீமை கலந்தீமை(1000)

18.தானைக் கண்டன்ன தானைக்கொண்டன்ன(1082)

19.பேரமர்க்கட்பட்டு பேரமர்க்கட்டு(1083)

20.விழியுமென் விளியுமென்(1209)

21.அழியின்மை அளியின்மை(1209)

22.நோவேல் அவரைக் நோவேம் இவர்தம்(1236)

எழுத்து மாற்றம் ‘ர் ‘ற்’ ’ங்‘ம்

பொறுள் மாறாத சொல்லை ஆளுதல்இமைப்பிற்

ஒரூஉ நடைகேற்ற பாடம் ‘மனத்தொடு ‘தனத்தொடு


நயமுடைய பாடம்


கொள்வேம் எனப் பாடங் கொண்டு திருப்பணி போலே காட்டி வாங்குதல் எனப் பொருள் விளக்கம் செய்கின்றார். இவ்விளக்கம் உலகியலுக்கு ஒதத்தாகக் காணப்படுகின்றது. அதுபோல நல்லார், தனத்தொடு, கேள்விய்தில்லார் எனக் கொள்ளும் பாடங்களும் நயமுடையதாக இருக்கின்றது.


பொருந்தா பாடம்


அனைய, நலன், கைதீமை, தானைக்கண்டன்ன எனப் பாடங்கொண்டு உரையெழுதும் இடங்கள் பொருத்த முடையதாக அமையவில்லை.


உரைவேறுபாடு


பரிதியார் 25 இடங்களில் பிற உரையாசிரியர்கள் உரையிலிருந்து வேறுபடுகின்றார்.


உரை வேறுபட காரணங்கள்


1. பாடவேறுபாடு

2. சொற்பிரிப்பு

3. கொண்டுகூட்டு

4. காலமரபு

5. இலக்கண வேறுபாடு

6. தொகைப்பெயர் விளக்கம்

7. ஒரு சொல்லுக்குப் பலபொருள்

8. நயம் கூறல்

9. விளக்ம் கூறல்

10. பிற இலக்கியச் செய்தியைப் புகுத்துதல்

11. கதையைப் பொருத்துதல்

12. கொள்கை முனைப்பு (பேரா. இரா. சாராங்கபாணி)


அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி(506)


இக்குறளில் அற்றார் என்பதற்கு ஒழுக்கம் அற்றார் என மணக்குடவர் உரையெழுதுகின்றார். பரிதியார் பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை என விளக்கமாக பொருளுரைக்கின்றார்.


மணக்குடவர் கூறும் ஒழுக்கம் அற்றார் என்பதில் ஒழுக்கம், நற்குணம்,நற்செயல் அனைத்தும் பொது சொல். ஆனால் பிரிதியார் கூறும் விளக்கம் பொருளற்றார் வறுமையாலும், கிளையற்றார் உலகில் ஒரு பற்றுக்கோடும் இல்லாமையானும் கல்வியற்றார் அறியாமையினாலும் தீய செயல்கள் செய்வாராகலின் அவரை நம்பாதே என்று கூறுவது மணக்குடவர் உரையினும் சிறப்புடையது.


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்(969)


என்னும் குறளுக்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர்,பரிமேலழகர் ஆகியோர் ஒரு மயிர் நீங்கினால் கவரிமான் உயிர் விடும் என்ற ஒரே கருத்தைக் கூறுகின்றனர்.பரிதியார் ஒரு மயிர் சிக்கினாலே என்று பொருள் கொள்ளுகின்றார்.மயிர் திரள்களில் ஒன்று சிக்கிய மாத்திரத்திலேயே உயிர் விடும் கவரிமான்.தன் வாழ்க்கையில் மனத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்படுமாயின் உயிர்விடுவர் சான்றோர் என்பதைக் குறிப்பிட மயிர்ச்சிக்கலைக் கூறுகின்றார்.இக்க்ருத்து பிற உரையாசியரினும் வேறுபடுகின்றது, நுட்பமாக உள்ளது.


.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்(69) - தான் பெற்ற காலத்தினும் மகிழும் என மணக்குடவரும் மற்றிவனைத் தான் முன்னம் ஈன்றெடுத்த அப்பொழுதினும் பெரிதும் மனமகிழும் எனக் காலிங்கரும் யாதும் அறியாத பெண்டிரும் மகிழ்வர் என பரிப்பெருமாளும் தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மனம்மகிழும் எனப் பரிமேழகரும் பொருளுரைக்கஈன்ற காலத்தில் ஆண்பிள்ளை என்று சொல்லக் கேட்ட மகிழ்ச்சியிலும் எனப் பரிதியார் பொருள் உரைக்கின்றார்.


வன்மையுள் வன்மை(153) –அன்பு

உய்யா விழுமம்(313) – நரகம்(பெருந்துன்பம்)

அளவிளா வில்லதான் வாழ்க்கை(523) , அடுமுரண் தேய்க்கும் அரண்(567), உள்ளம் சிறுகுவ (798) – செல்வம்

காம்ம் உழந்நு(1131) – மத்த்தினாலே துயரமுற்று (காமம் காரணமாக)


பிறர் கூறா விளக்கங்கள் பரிதி உரையில் மட்டும் காணப்படுபவை


மனத்தது மாசாக மாண்டார் நீராடி(278) – மார்கழி தீர்த்தம், மகா தீர்த்தம்

நாளது ஒன்றுபோற் காட்டி(334) – ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று தோன்றும் நாள்

எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்(435) நெருப்பின் முன்னர் வைக்கோற் போர் பட்டது போலவும், தூறு போலவும் கெடும்.


கண்டு கேட்டு உண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்(1101) – விளக்குக் கண்டு அழிந்த விட்டிலும், யாழ் கேட்டு அழிந்த அசுணமும், இரை கண்டு அழிந்த மீனும், சென்பக மணம் உண்டு அழிந்த வண்டும்,மெய்யின்பம் கண்டு அழிந்த யானையும் ஒவ்வொரு புலனால் அழிந்தன.


உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால்(1106) – தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் தளிர்கையினாலே


சிறப்பான உரைப்ப பகுதி


ஆண்மை(148) – சமர்களத்தில் வெட்டி மீண்டு வருகின்ற ஆண்மையல்ல, பிறர்மனை நோக்காமை இருத்தலே ஆண்மை.


வன்மை(153) – வன்மையாவது மலையின் உச்சியின் மேலே ஒரு கல்லை ஏற்றுதல் கடுகிலே கடலை அடக்குதல் முதலியன.


பயன்மரம்(216) – பயன்படு மாமரம், பலாமரம், பனைமரம்


துறந்தார்(310) – தொண்ணூற்றாறு த்த்துவத்தையும் உடலோடு இருக்கையிலே புளியம்பழம் ஓடும் போலே துறந்தார்.


எழுபிறப்பு(62) – தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம்


கோட்டுப்பூ (1313) – செண்பகப் பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூச் சூடினும்.


பொருந்தா உரைகள் போல் தோன்றுவன


பீலீபெய் சாக்காடும் அச்சிறும் பண்டம்

சாம மிகுத்துப் பெயின்(475)


இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் மாற்றானின் வலியிறிதலைப் ப்ற்றி பேசுகின்றது அதனை அதிகார விளக்கத்தில் வலியிறிதலாவது மாற்றான் சத்துவத்தை அறியவேண்டுமெனப் பரிதியாரும் பிற உரையாசிரியர்களும் பொருளுரைக்கின்றனர். இக்குறளுக்கு எளியவர் என்று பலரோடு பகை கொள்வான் தான் வலியனேயாயினும் பலர் தொக்கவழி வலியழியும்(பரிமேலழகர்) என்று பொருள்படும்படி வர பரிதியார் நொய்ய பீலியாகிலும் கனமாக ஏற்றினால் வண்டி அச்சு முறியும்; அதுபோலப் பெலமில்லாதார் பலர் கூடினாலும் சத்துவமாம்; ஆகையால் அரசன் வீரராகாத பேரையும் கனம்பெறக் கூட்டிக் கொள்ளவான். என அரசன் வலிமையில்லாதவர்களையும் தன் படையில் சேர்த்துக்கொள்ளவான் எனப் பொருள்பட உரையெழுதுகின்றார்.


இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு (432)


வேண்டம் வழி பொருள் கொடாமையும் நன்மையினீங்கிய மானமும் அளவிறந்த வுவகையும் அரசனுக்கு குற்றம் எனப் பரிமேலழகர் உரைக்க பரிதி குற்றம் என்றதும் தன் பேரிலே வராமல் அழகு உண்டாக நடப்பானாகில், இறையென்று சொல்லப்பட்ட சிவனும் இவனைப் பிரியமாக மனத்துக்குள்ளே கண்டிருப்பர் என விளக்கும் உரையில் இறையென்று சொல்லப்படும் சிவனும் இவனைப் பிரியமாக மனத்துள்ளே கண்டிருப்பார்


நுனிக்கொம்ப ரேரினா ரஃதிறந் தூக்கி

னுயிர்க்கிறுதி யாகி விடும்(476)


அடிப்பனையில் நின்று மரத்தில் பழம் பறிக்காமல் நுனிக்கொம்பிலே ஏறினார் போல, கெட்ட புத்தியை எண்ணாமல் உறுதியான காரியத்தை விசாரிக்கில் அக்காரியம் பலிக்கும் என பரிதியார் கொள்ளும் உரையில் கிளையில்லாத பனையைக் காட்டி உரை வகுத்தமை பொருந்தாது.


தும்மச் செறுப்ப வழுதா ணுமருள்ள

லெம்மை மறைத்திரோ வென்று(1318)


தும்மல் உண்டாகக் கண்ட நாயகி அழுதாள்; உமது நாயகி வாழ்த்தத் தும்முவ தன்றி இவள் வாழ்த்துத் தும்ம ஒண்ணாது என்று ஊடினாள். செறுப்ப என்பதற்று உண்டாக என்னும் பரிதியின் பொருள் எம்மை மறைத்திரோ என்னும் வரும் தொடரோடு இயையவில்லை. அதற்கு அடக்க என்னும் பொருளே பொருந்தும்.


பொருள்கோடல்


பரிதியார் திருக்குறளைப் புரிந்துகொள்ளுவதற்கு /பொருள் கொள்வதற்கு அடிப்படையாக சைவசமயத்தையும, புராணகதைகளையும், வழக்கில் பயன்பாட்டில் இருக்க கூடிய கதைகளையும் உவமைகளையும், வழக்குச் சொற்களையும கொண்டு, குறளின் கருத்தினை அறிந்து கொண்டு மேற்சொன்னவைகளை அடிப்படையாக கொண்டு பொருள்விளக்கம் செய்கின்றார்.


* பரிதியார் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதயில் வாழ்ந்தவர்.


* திருக்குறளை சைவசமயம் சார்ந்து கட்டமைக்கின்றார்.


* திருக்குறளை பொதுஜன தளத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக மிக எளிய முறையில் உரைவரைகிறார்.


* வடசொல் மிகுதியாக ஆளுகிறார்.

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவிற்கு மிகுந்த நன்றிகள் மேடம்
நா. கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கட்டுரை! உங்கள் ஆய்வு, பதிப்பு முயற்சிகள் வெல்க.

அன்புடன்,
நா. கணேசன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நா.கணேசன் அவர்களே.
சிவகுமாரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பரிமேலழகர் உரை நான் படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி மேடம். என் தளத்தில் இணைந்ததற்கு மிக்க நன்றி. கருத்துரைகள் இட்டுச் சென்றால் சிறியேன் மிகவும் மகிழ்வேன்.தங்களைப் போன்ற தமிழாய்ந்த பெரியோரின் கருத்துக்கள் என் எழுத்தை செம்மைப் படுத்தும் என நம்புகிறேன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சிவகுமரன் நான் குறிப்பிட்டுள்ளது பரிதியார் பரிமேலழகர் அல்லர்.
ksground இவ்வாறு கூறியுள்ளார்…
thank you ... your message was so useful......
anbarasan இவ்வாறு கூறியுள்ளார்…
dear sister,

i will read every day in your website then note at my diary of good massage

thank you

will be continue your gooservice
Sivaprakash இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…